குளங்களில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு


குளங்களில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு
x

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குளங்களில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

திருப்பூர்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குளங்களில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

பறவைகள் கணக்கெடுப்பு

பறவைகளை பாதுகாக்கும் வகையில் கணக்கெடுப்பு நடத்தி அதன் எண்ணிக்கையை தக்க வைப்பதில் வனத்துறை தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நடைபெற்றது.

அப்போது என்.மருள்பட்டி குளம், பாப்பான்குளம், செட்டியார்குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம், ராயகுளம், தேன்குளம், சின்னஆண்டிபாளையம் குளம், சாமளாபுரம் குளம், ராமியம்பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர் குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் அணை உள்ளிட்ட 20 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

பயிற்சி வகுப்பு

இந்த கணக்கெடுப்பில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமையிலான வனத்துறை பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கு முன்பாக நேற்று முன்தினம் பறவைகள் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி வகுப்பு மற்றும் கணக்கெடுப்பிற்கு தேவையான தரவு புத்தகம் போன்றவை வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் 11 மணி வரை கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது நத்தை குத்தி நாரை, புள்ளி மூக்கு வாத்து, சிகப்பு மூக்கு ஆள்காட்டி, பாம்பு தாரா, நீர் கக்கா, சாம்பல் நாரை, செந்நீல நாரை, நீல தாலை கோழி, நாம கோழி, தாமரை கோழி, மண் கொத்தி, சிறிய நீல மீன்கொத்தி, முக்குளிப்பான், வெள்ளை அரிவாள் மூக்கன், நீலவால் கீச்சன், தவிட்டு குருவி, செம் பருந்து, செண்பகம், மஞ்சள் வாலட்டி, மைனா, பச்சை கிளி, கரிச்சான், நீல வால் பஞ்சுருட்டன், தையல் சிட்டு, ஊதா தேன்சிட்டு, கதிர் குருவி, சிட்டு குருவி, குயில், கவுதாரி, பனை உழவாரன், வால் காக்கை, சின்ன கீழ்க்கைச்சிறகி, சூரமாறி, பொறி மண்க்கொத்தி, பொறி வல்லூறு, குள்ளத் தாரா உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் புதர்களில் காணப்பட்ட 54 வகையான பறவைகள் கணக்கீடு செய்யப்பட்டது.

மாணவர்கள்

உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், உயிரியலாளர் மகேஷ்குமார், வேட்டை தடுப்பு காவலர் நரசிம்மன், தன்னார்வு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், கார்த்திகேயன் உள்ளிட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story