பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் -மத்திய அரசுக்கு, உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை


பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும்  -மத்திய அரசுக்கு, உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
x

பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

மதுரை


பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

பெட்ரோல்-டீசல்

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

அனைத்து மாநிலங்களிலும் ஒரே வரி விகிதம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. அதே வேளையில் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பொருட்கள் விளைவிக்கப்படுகிறது. இவை அனைத்தையும் அவர்களின் தேவைக்கு ஏற்றார்போல் ரெயில் மூலமாகவோ, சாலை மூலமாகவோ எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழம், வேளாண் விளைப்பொருட்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. குறிப்பாக வடமாநிலத்தில் இருந்துதான் தமிழகத்திற்கு தேவையான உளுந்து, துவரை, பாசி, பயறு, சீரகம், கடுகு, சோம்பு போன்ற பொருட்கள் எடுத்து வரப்படுகிறது. இவை அனைத்தையும் எடுத்து செல்வதற்கு டீசல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜி.எஸ்.டி.க்குள்

இந்தநிலையில், மத்திய நிதிமந்திரி டெல்லியில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் கூறியதுபோல், மாநிலங்கள் இணைந்து பெட்ரோல்-டீசல், மண்எண்ணெய் ஆகியவற்றை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால், உணவு உற்பத்தியும், தொழில் வளர்ச்சியும் சிறப்பாக அமையும். எனவே, மார்ச் மாதம் நடக்க இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் அனைத்து மாநில அமைச்சர்களும் ஒருங்கிணைந்து சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோல், சரக்கு மற்றும் சேவையில் வரியில் உள்ள பல்வேறு குளறுபடிகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியானது 5, 12, 18, 28 சதவீதங்களில் இருப்பதை மாற்றி குறைத்து அறிவிக்க வேண்டும். அத்தியாவசிய உணவு பொருளான அரிசி, பருப்பு, கோதுமை, சிறுதானியம், வெல்லம், சவ்வரிசி, புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, ஈர இட்லி மாவு மற்றும் வத்தல் போன்றவைக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

5 சதவீத வரி

சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலில் பொருட்களுக்கான வரி விகிதம் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறது. இது சிறு வணிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சென்றடைவதில்லை. அவர்கள் சென்றடையும் விதமாக வரி மாற்றத்தை மூன்று மாத கால அவகாசம் கொடுத்து வணிக வரி சரக அதிகாரிகள் மூலம் வணிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எடுத்து சென்ற பின்னரே அமல்படுத்த வேண்டும். வெண்ணெய் மற்றும் நெய்க்கு தற்போது 12 சதவீத வரி உள்ளது. இதனை 5 சதவீதமாக மாற்ற வேண்டும்.

அதுபோல், குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கும், மதிப்பு கூட்டப்பட்ட பிஸ்கட்டுக்கும் ஒரே வரி உள்ளது. அதனை 5 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story