விவசாயத்தை பாதிக்காமல் 8 வழிச்சாலை திட்டத்தை வேண்டுமானால் கொண்டு வாருங்கள் - அன்புமணி ராமதாஸ்
விவசாயத்தை பாதிக்காமல் 8 வழிச்சாலை திட்டத்தை வேண்டுமானால் கொண்டு வாருங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பனமரத்துப்பட்டி,
விவசாயத்தை பாதிக்காமல் 8 வழிச்சாலை திட்டத்தை வேண்டுமானால் கொண்டு வாருங்கள். விவசாயத்தை அழித்து தான் கொண்டு வருவோம் என்றால் அதை நிச்சயமாக நாங்கள் எதிர்ப்போம் என்று பனமரத்துப்பட்டியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி கூறினார்.
மேட்டூர் அணையில் இருந்து வீணாக கடலில் கலக்கும் காவிரி உபரிநீரை சேலம் பனமரத்துப்பட்டி ஏரியில் நிரப்பி சேலம் மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி இன்று பனமரத்துப்பட்டி ஏரிக்கு வருகை தந்தார். அப்போது அவர் கொட்டும் மழையில் ஏரி பகுதியை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
திமுகவின் நிலைப்பாடு என்ன என்று எனக்கு சரியாக புரியவில்லை. சட்டமன்றத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்,இன்றைய முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 8 வழி சாலை திட்டத்தை ஆதரிப்போம் என்று சட்டமன்றத்திற்குள் பேசினார். சட்ட மன்றத்திற்கு வெளியில் பேட்டி கொடுக்கும் போது, இந்தத் திட்டத்தை எதிர்ப்போம் என்று பேசினார்.
தேர்தல் நேரத்தின் போதும் இத்திட்டத்தை நாங்கள் எதிர்ப்போம் என்று பேசினார். இப்போது அவர்களது அமைச்சர் இதை நாங்கள் ஆதரிப்போம் கொண்டு வருவோம் என்று சொல்கிறார். எங்களை பொறுத்தவரை கட்டுமானங்கள் தேவை. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் கட்டுமானம் தேவையானதுதான்.
ஆனால் சேலத்திற்கும் சென்னைக்கும் மூன்று நெடுஞ்சாலைகள் இருக்கிறது. நான்காவது ஒரு சாலை அது தேவையில்லை என்பது தான் எங்களது நிலைப்பாடு. மேலும் விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இது போன்ற திட்டங்களை கொண்டு வருவதை நாங்கள் எதிர்ப்போம்.
சுற்றுச்சூழலுக்குக்கும், வனத்திற்கும் விவசாயத்திற்கும் எதிரானதாக இந்த திட்டம் உள்ளது. நான் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தத் திட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டேன். வழக்கு நிலுவையில் இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து கேவியட் வழக்கும் நான் போட்டுள்ளேன். விவசாயத்தை பாதிக்காமல் இந்த திட்டத்தை வேண்டுமானால் கொண்டு வாருங்கள். விவசாயத்தை அழித்து தான் கொண்டு வருவோம் என்றால் அதை நிச்சயமாக நாங்கள் எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.