வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை-பணம் திருட்டு
ஆரல்வாய்மொழியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன்நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன்நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பூட்டு உடைப்பு
ஆரல்வாய்மொழி ஆலடி நகரை சேர்ந்தவர் சுகுமாறன். இவருக்கு மல்லிகா (வயது54) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
இந்தநிலையில் மல்லிகா தனது மகனுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு கன்னியாகுமரியில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றார். பின்னர், நேற்று மாலையில் மகன் சுஜித் மட்டும் வீட்டுக்கு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த ஒரு பீரோ, அலமாரி ஆகியவை உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
நகை-பணம் திருட்டு
இதுபற்றி அறிந்ததும் மல்லிகா வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 மோதிரம், ஒரு பிரேஸ்ெலட், ஒரு மூக்குத்தி என மொத்தம் 3 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ஆகியவை மாயமாகி இருந்தன.
ஆனால், மறைத்து வைத்திருந்த தங்கக்கொடி, பணம் மற்றும் சாமிக்கு நேர்த்தி கடனுக்காக முடிந்து வைத்திருந்த பணம், திருப்பதி கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த வைத்திருந்த தங்க மோதிரம் ஆகியவை அப்படியே இருந்தன. வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.