வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகள் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகள் திருட்டு
x

உப்பிலியபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

உப்பிலியபுரம்,ஆக.14-

உப்பிலியபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதிய வீடு

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள வைரிசெட்டிப்பாளையம் தெற்கு காலனியை சேர்ந்தவர் கனகவள்ளி (வயது 45). இவர் விபத்தில் இருகால்களையும் இழந்தவர். இவர் துறையூரில் புதிய வீடு கட்டி வருகிறார். இதனால் அவர் வைரிசெட்டிப்பாளையத்தில் உள்ள தனது தாய் பாப்பாத்தி அம்மாளுடன் தங்கி இருந்தார். கனகவள்ளியுடன் அவரது தம்பி சந்திரசேகர் என்பவரும் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வேலை விஷயமாக சந்திரசேகர் நாமக்கல்லுக்கும், கனகவள்ளி, பாப்பாத்தியம்மாள் ஆகியோர் துறையூரில் புது வீடு கட்டி வரும் பணிகளை பார்க்கவும் சென்றுவிட்டனர். இந்த நிலையில் அவர்களது வீடு திறந்து கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் கனகவள்ளிக்கு தகவல் தெரிவித்தனர்.

35 பவுன் நகைகள் திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த கனகவள்ளி தாயுடன் துறையூரில் இருந்து வைரிசெட்டிப்பாளையத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஷ்டின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்துள்ளனர்.

வலைவீச்சு

பின்னர் சாமி படத்தின் அருகே வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை திருடி சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

உப்பிலியபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் கொள்ளை நடைபெற்றது. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியதின் பேரில் திருட்டு சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது, மீண்டும் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே திருட்டை தடுக்க உப்பிலியபுரத்தில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி ரோந்து பணி தொய்வு இன்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story