பள்ளி தாளாளர் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகை கொள்ளை
பள்ளி தாளாளர் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகை கொள்ளை
தஞ்சையில் பட்டப்பகலில் பள்ளி தாளாளர் வீட்டின் கதவை உடைத்து 6½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் தடயத்தை அழிக்க மஞ்சள் தண்ணீரை ஊற்றி சென்றனர்.
பள்ளி தாளாளர் வீடு
தஞ்சை வெண்ணாற்றங்கரை முதன்மை சாலை பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி (வயது63). இவர் கண்டியூரில் மழலையர் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இந்த பள்ளியின் தாளாளராகவும் இருந்து வருகிறார். இவர் தனது மகள்கள் தேன்மொழி, சண்முகபிரியா ஆகியோருடன் வசித்து வருகிறார். 2 மகள்களும் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் இவர்கள் 3 பேரும் வழக்கம்போல் காலை 9.15 மணிக்கு பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்றுகாலை வீட்டை பூட்டிவிட்டு விஜயலட்சுமி தனது மகள்களுடன் பள்ளிக்கு சென்றார்.
பள்ளி முடிந்தவுடன் மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை திறக்க முயற்சி செய்தார். ஆனால் திறக்க முடியவில்லை. ஏன்? திறக்க முடியவில்லை என பார்த்தபோது பூட்டு மாற்றப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி வீட்டிற்குள் பார்த்தபோது முன்பக்க மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உடனே 3 பேரும் பின்பக்கமாக சென்று பார்த்தபோது, பின்புற இரும்பு கதவும் திறந்து கிடந்தது.
6½ பவுன் கொள்ளை
மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பூஜை அறையில் இருந்த 3 பீரோக்களும் திறக்கப்பட்டு, துணிமணிகள், பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. அதுமட்டுமின்றி படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. இந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 6½ பவுன் நகையை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டது தெரியவந்தது.
மேலும் தடயங்கள் ஏதும் போலீசாரிடம் சிக்கிவிடாமல் இருப்பதற்காக பூஜை அறை, படுக்கை அறையிலும், பீரோக்களிலும் மஞ்சள் தண்ணீரை ஊற்றிவிட்டு சென்றுவிட்டனர். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனியாண்டி, குருசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மோப்பநாய்
வீட்டிற்குள் திருடர்களின் தலைமுடி உள்ளிட்ட ஏதாவது பொருட்கள் கிடக்கிறதா? என ஒவ்வொரு அறையாக சென்று போலீசார் தேடி பார்த்தனர். சோழா என்ற பெயருடைய மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அந்த நாயிடம் பீரோவில் இருந்த நகை பாக்ஸ், மணிபர்சை மோப்பம்பிடிக்க வைத்தனர். உடனே அந்த நாய் வீட்டில் இருந்து வேகமாக வெளியே சென்று மெயின்சாலையை கடந்து முட்புதர்கள் வளர்ந்து காணப்பட்ட இடத்திற்கு சென்று சுற்றி சுற்றி வந்தது. பின்னர் அருகில் இருந்த மண்டபத்தில் சென்று நின்று கொண்டது.
இதனால் நீண்டநாட்களாக கண்காணித்து வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த நபர்கள் தான் நகையை திருடிச் சென்று இருக்க வேண்டும் என போலீசார் கருதினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு, பூட்டு உள்ளிட்ட பகுதிகளில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
கண்காணிப்பு கேமரா
அதுமட்டுமின்றி அந்த பகுதிகளில் ஏதாவது கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.