2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு
2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு
மன்னார்குடியில் ஒரே தெருவில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழபாலம் அருகே சின்னம்மாள் நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
கணேசனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக மன்னார்குடியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை அவரது குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
15 பவுன் நகைகள் திருட்டு
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நேற்றுமுன்தினம் இரவு கணேசன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகளை திருடி சென்றனர்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள செல்வகுமார் என்பவரின் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து அதே தெருவை சேர்ந்த விக்னேஷ் என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து பார்த்த போது நகைகள் இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
கணேசன் வீட்டில் நகைகளை திருடிய மர்ம நபர்கள், அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கணேசன் வீட்டின் எதிர்புறத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கைலி அணிந்து கொண்டு மேல் சட்டை அணியாமல் 3 பேர் கொண்ட கும்பல், கணேசன் வீட்டில் திருடி விட்டு வெளியே வந்த காட்சி பதிவாகி இருந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மன்னார்குடி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மன்னார்குடியில் ஒரே தெருவில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.