வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
ஜோலார்பேட்டை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 7 பவுன் நகையை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே கருப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட ஐஸ்வர்யம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அம்பிகா (வயது 34). சேகர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த 4-ந் தேதி அம்பிகா தனது பிள்ளைகளுடன் திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று மாலை அம்பிகா வீட்டிற்கு வந்தார். அப்போது உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, துணிகள் கலைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி ெசன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அம்பிகா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.