பெண்ணாடம் அருகே பரபரப்புகோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டுமர்மநபர்கள் கைவரிசை
பெண்ணாடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்ணாடம்,
முந்திரி காட்டு பகுதியில்
அரியலூர் மாவட்டம், கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள முந்திரிக்காட்டு பகுதியில் 4 அடி உயரமுள்ள சில்வர் உண்டியல் கிடப்பதாக அரியலூர் மாவட்டம், தளவாய் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த உண்டியலை கைப்பற்றினர். அப்போது உண்டியலின் மேல் பகுதியில் கருமாரியம்மன் கோவில் சவுந்தர சோழபுரம் என பெயர் பதிவிடப்பட்டு இருந்ததை பாா்த்தனர். பின்னர் இது பற்றி சவுந்தரசோழபுரம் கிராம மக்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
உண்டியல் திருட்டு
இதையடுத்து கிராம மக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவில் மூலஸ்தானத்திற்கு செல்லும் கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்திருந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கத் தாலி மற்றும் சிறிய அளவிலான சில்வர் உண்டியல் ஒன்றும் பக்கத்து அறையில் இருந்த 4 அடி உயரம் உள்ள பெரிய சில்வர் உண்டியலும் திருடு போனதும், திருடிய உண்டியலில் உள்ள பணத்தை மர்ம நபர்கள் எடுத்துவிட்டு காலி உண்டியலை அரியலூா் மாவட்ட எல்லையில் உள்ள முந்திரிகாட்டு பகுதியில் வீசி சென்றதும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
பின்னர் இது பற்றி உடனடியாக பெண்ணாடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஆடித்திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டதாகவும் இதனால் உண்டியலில் ரூ.50 ஆயிரம் ரொக்கம், 4 பவுன் நகைகள் இருந்திருக்கலாம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.