ஈக்களை கட்டுப்படுத்த பண்ணைகளில் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்
கோழிப்பண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்த உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 3 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (வியாழன்) மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும்.
காற்று மணிக்கு 8 கி.மீ.வேகத்தில் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சம் 30 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தமிழகத்தில் கோடை மழைக்கு பின்பு நாய்களில் பார்வோ வைரஸ் மூலம் பரவும் ரத்த கழிச்சல் நோய் காணப்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்படும் நாய்களில் 86 விழுக்காடு தடுப்பூசி போடாத நாய்கள் ஆகும். எனவே நாய்களுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி குடற்புழு நீக்கம் செய்து, தடுப்பூசி போட வேண்டும்.
ஈ கட்டுப்பாடு
நாமக்கல் மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் மாலை நேரங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் வெப்ப சலனம் அதிகமாகி உள்ளதால், பூச்சி இனங்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்ததாக இருக்கும். அதனால் கோழிப்பண்ணைகளில் ஈ கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும்.
பண்ணைகளில் தண்ணீர் கசிவு இல்லாமல் இருக்க பழுதடைந்த நிப்பில்களை மாற்ற வேண்டும். இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தீவன சிதறல்களை தவிர்க்க வேண்டும். ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.