குழாய் உடைந்து சாலையில் வீணாக செல்லும் குடிநீர்
வெம்பக்கோட்டை அருகே குழாய் உடைந்து சாலையில் வீணாக குடிநீர் செல்கிறது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே குழாய் உடைந்து சாலையில் வீணாக குடிநீர் செல்கிறது.
வீணாகும் குடிநீர்
சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் இருந்து சிவகாசிக்கு குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டின் அடிப்பாகத்தில் குழாய்கள் செல்வதால் பல இடங்களில் தண்ணீர் உடைந்து வீணாக செல்கின்றது.
இதனை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சிவகாசி மாநகராட்சியில் இருந்து சாலையில் இருந்து 5 அடி தொலைவில் 12 கிலோமீட்டர் தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
அதிகாரிகள் நடவடிக்கை
4 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இந்த குழாய்கள் பதிக்கப்பட்டன. மேலும் குழாய்கள் பதிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் சத்திரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக 3 நாட்களாக தண்ணீர் பெருக்கெடுத்து வீணாக சாலையில் செல்கிறது.
இதனால் அந்த சாலை சேதமடைந்து வருவதுடன், சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.