உடைந்து கிடக்கும் சாலையோர தடுப்பு கம்பிகள்
தஞ்சையில் உடைந்து கிடக்கும் சாலையோர தடுப்புகம்பியால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்
தஞ்சையில் உடைந்து கிடக்கும் சாலையோர தடுப்புகம்பியால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
சாலையோர பள்ளம்
தஞ்சை பள்ளியக்கிரஹாரம் பகுதி வெண்ணாற்றங்கரையோரத்தில் களஞ்சேரி சாலை உள்ளது. இந்த சாலை குருங்களூர், உதாரமங்கலம், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தினரின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது.
இந்த நிலையில் களஞ்சேரி சாலையின் ஒரு பகுதி வெண்ணாறும், மற்றொரு பகுதி வயல்வெளியாகவும் உள்ளது. இதனால் சாலை மேடாகவும், சாலையோரம் பள்ளமாகவும் காட்சி அளிக்கிறது. எனவே, வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
தடுப்பு கம்பிகள்
இதனை தடுக்கும் வகையில் களஞ்சேரி ரோட்டில் சாலையோர தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சமின்றி சென்று வந்தனர்.
இந்த நிலையில் தற்போது சாலையோர தடுப்பு கம்பிகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
குறிப்பாக பெரும்பாலான தடுப்பு கம்பிகள் தரையோடு தரையாக உள்ளன. அவற்றை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து தடுப்புகம்பிகள் இருப்பதே தெரியாதபடி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் அச்சம்
மேலும், அந்த பகுதியில் முறையான மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்துக்குள் விழுந்து காயம் அடைகின்றனர்.இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஒரு தடுப்புகம்பி உடைந்து கூர்மையான கத்தி போன்று சாலையை நோக்கி நிற்கிறது. இவற்றால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையோர தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.