உடைந்த இருக்கைகள்; நடைபாதை ஆக்கிரமிப்பு


உடைந்த இருக்கைகள்; நடைபாதை ஆக்கிரமிப்பு
x

உடைந்த இருக்கைகள்; நடைபாதை ஆக்கிரமிப்பு

தஞ்சாவூர்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் உடைந்த இருக்கைகள், நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பழைய பஸ் நிலையம்

தஞ்சை பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. இதில் 39 பஸ் நிறுத்தங்கள், 93 கடைகள், 4 பொது கழிப்பறை கட்டிடங்கள், கண்காணிப்பு அறை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி, புதிய பஸ் நிலையம், வல்லம், ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை, திருக்கருக்காவூர், வெட்டிக்காடு, பாச்சூர், மாரியம்மன்கோவில், திருவையாறு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, வடுவூர், பாபநாசம், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

போதுமான இருக்கைகள்

இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இதன்காரணமாக பகல் நேரத்தில் பரபரப்பாக காணப்படும். பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அமர இருக்கைகள் போதுமான அளவு அமைக்கப்படவில்லை. குறைந்த அளவிலான இருக்கைகளே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் நடைபாதையில் அமர்ந்தும், நின்று கொண்டும் பஸ்சிற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சையில் இருந்து செல்லும் பெரும்பாலான பஸ்கள் கிராம பகுதிகளுக்கு செல்வதால் அந்த பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் வந்து செல்வதால் பயணிகள் முன்கூட்டியே பஸ் நிலையத்திற்கு வந்து விடுவார்கள். இவர்கள் அமருவதற்காக குறைந்த அளவில் அமைக்கப்பட்ட இருக்கைகளில் ஓரிரு இருக்கைகள் உடைந்து மக்கள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளன.

அவதி

அதுமட்டுமின்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை கூட கடை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் முதியவர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, தஞ்சை ஸ்மார்ட் சிட்டி பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள் உடைந்து உள்ளது. பஸ் நிலையம் உள்ளே இயங்கும் கடைகள் அவர்களது இடங்களை தவிர்த்து, பயணிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் திருவையாறு மார்க்க பஸ்கள் செல்லும் வழிகள் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றனர்.


Next Story