கண்மாயில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
கண்மாயில் குளிக்கச்சென்றபோது அதில் மூழ்கி அண்ணன், தம்பி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அருப்புக்கோட்டை,
கண்மாயில் குளிக்கச்சென்றபோது அதில் மூழ்கி அண்ணன், தம்பி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
குளிக்க சென்றனர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி மேலதெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது33). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியம்மாள். இவர்களது மகன்கள் சித்தார்த் (8), சந்திரமணி (7).
அதேபகுதியில் உள்ள பள்ளியில் சித்தார்த் 4-ம் வகுப்பும், சந்திரமணி 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று பள்ளி முடிந்ததும் இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பாப்பாவி நீராவி கண்மாயில் குளிக்க சென்றனர்.
சகோதரர்கள் சாவு
நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அவர்களை பல இடங்களில் தேடினர். அப்போது கண்மாய் தண்ணீரில் சித்தார்த் உடல் மிதப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சித்தார்த்தின் உடல் மீட்கப்பட்டது. மேலும் சந்திரமணியை தேடினர். அப்போது கண்மாயின் வேறு ஒரு பகுதியில் சந்திரமணியின் கால் மட்டும் வெளியே தெரிந்தது.
இதையடுத்து சந்திரமணியின் உடலையும் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 2 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்மாயில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.