குச்சனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி அண்ணன்-தங்கை பலி


குச்சனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி அண்ணன்-தங்கை பலி
x
தினத்தந்தி 5 April 2023 2:15 AM IST (Updated: 5 April 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

குச்சனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி அண்ணன்-தங்கை பலியாகினர்.

தேனி

குச்சனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி அண்ணன்-தங்கை பலியாகினர்.

அண்ணன்-தங்கை

தேனி மாவட்டம் குச்சனூர் அருகே உள்ள துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கலைவாணி (வயது 30). இவர்களுக்கு தீனதயாளன் (10) என்ற மகனும், மகாசக்தி (7) என்ற மகளும் இருந்தனர். மணிகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் 2 குழந்தைகளுடன் கலைவாணி தனியாக வசித்து வந்தார். கலைவாணி, தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். தீனதயாளன், குச்சனூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும், மகாசக்தி அதே பள்ளியில் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று விடுமுறை என்பதால் கலைவாணி தனது குழந்தைகளுடன், அப்பகுதியில் உள்ள முல்லைப்பெரியாற்றுக்கு துணிதுவைப்பதற்காக சென்றார். அங்கு அவர் துணிதுவைத்து கொண்டிருக்க, அவரது 2 குழந்தைகளும் ஆற்றின் கரைப்பகுதியில் நின்று குளித்துக்கொண்டிருந்தனர்.

ஆற்றில் மூழ்கினர்

இதற்கிடையே துணிதுவைத்து முடித்ததும் கலைவாணி, துணிகளை காயவைப்பதற்காக ஆற்றில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் இருந்த கொடியில் காயப்போட சென்றார். இதற்கிடையே ஆற்றின் கரையோரம் நின்று குளித்துக்கொண்டிருந்த தீனதயாளனும், மகாசக்தியும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் ஆற்றில் மூழ்கினர்.

இந்தநிலையில் துணியை காயபோட்டுவிட்டு திரும்பி வந்த கலைவாணி, தனது 2 குழந்தைகளும் மாயமானதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அக்கம்பக்கத்தினரை அழைத்தார். அதன்பேரில், அக்கம்பக்கத்தில் இருந்த இளைஞர்கள் சிலர், ஆற்றில் இறங்கி குழந்தைகளை தேடினர்.

சோகம்

அப்போது நீரில் மூழ்கிய தீனதயாளன் மற்றும் மகாசக்தியை மீட்டு, சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முல்லைப்பெரியாற்றில் மூழ்கி அண்ணன்-தங்கை பலியான சம்பவம், துரைசாமிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story