ஆரணியில் வியாபாரியை தாக்கிய அண்ணன்-தம்பி கைது
ஆரணியில் வியாபாரியை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிளாஸ்கார தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 35), அடகுக்கடை நடத்தி வருகிறார். பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் மெக்கானிக் கடை நடத்தி வருபவர்கள் நரேஷ் (30), கிருஷ்ணதாஸ் (27). இருவரும் அண்ணன்-தம்பிகள். கடந்த செப்டம்பர் மாதம் அருண்குமார் மோட்டார் சைக்கிளை பழுது பார்க்க அவர்களிடம் கொடுத்துள்ளார். அதற்கு ரூ.1,500 செலவாகும் என கூறியுள்ளனர்.
இதனையடுத்து அருண்குமார் ரூ.1,500 கொடுத்துவிட்டு சென்றதாக தெரிகிறது. பின்னர் அவர் மோட்டார் சைக்கிளை எடுக்க சென்ற போது அண்ணன்-தம்பிகள் 300 ரூபாய் தரவேண்டும் என அருண்குமாரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணம் கொடுத்து விட்டேனே என சொல்லி மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அண்ணன்-தம்பி இருவரும் மதுகுடித்துவிட்டு அருண்குமாரிடம் 300 ரூபாய் கேட்டு ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து நரேஷ், கிருஷ்ணதாஸ் ஆகிேயாரை கைது செய்தனர்.