இறந்த மாற்றுத்திறனாளி தங்கையின் நினைவாக இலவச சிறப்பு பள்ளியை உருவாக்கிய சகோதரர்


இறந்த மாற்றுத்திறனாளி தங்கையின் நினைவாக இலவச சிறப்பு பள்ளியை உருவாக்கிய சகோதரர்
x

விளாத்திகுளம் அருகே இறந்த மாற்றுத்திறனாளி தங்கையின் நினைவாக இலவச சிறப்பு பள்ளியை சகோதரர் உருவாக்கியுள்ளார். இந்த பள்ளியை கலெக்டர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே இறந்த மாற்றுத்திறனாளி தங்கையின் நினைவாக சகோதரர் உருவாக்கிய இலவச சிகிச்சை மையத்துடன் கூடிய சிறப்பு பள்ளியை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று திறந்து வைத்தார்.

மாற்றுத்திறனாளி தங்கை நினைவாக...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ விளாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தனேஷ் கனகராஜ். தசைநார் சிதைவு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த இவரின் மாற்றுத்திறனாளி தங்கை கவிதா கனகராஜ் கடந்த ஜனவரி 14-ந்தேதி உயிரிழந்துள்ளார். இவரின் நினைவாக கீழ விளாத்திகுளத்தில் தனது வீட்டினை மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிகிச்சை மையத்துடன் கூடிய சிறப்பு பள்ளியை தனேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

கலெக்டர் திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ரிப்பன் வெட்டி சிறப்பு பள்ளியை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பள்ளியில் ஆட்டிசம், பெருமூளை வாதம், அறிவுசார் குறைபாடு, கற்றல் மற்றும் பல குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சையுடன் கூடிய கல்வி வழங்கப்படுகிறது. மேலும் இப்பள்ளியின் சார்பில் இலவச வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பள்ளி குறித்து தனேஷ் கனகராஜ் கூறுகையில்,

இறந்த எனது தங்கை நினைவாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது குறித்து தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரனை சந்தித்து விபரம் கேட்டேன். அவரது ஆலோசனைப்படி எங்களது அக்லூ அறக்கட்டளை சார்பில் கள ஆய்வு மேற்கொண்டதில் இப்பகுதியில் 260 மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இந்த குழந்தைகளுக்கு இக்கல்வி ஆண்டிலேயே உதவுவதற்காக எனது வீட்டையே சிறப்பு பள்ளியாக தொடங்கியுள்ளோம். இங்கு அவர்களுக்கு பல்வேறு தெரபி, சிகிச்சைகள் மற்றும் அடிப்படைக்கல்வி போன்றவை அளிப்பதற்காக அனுபவமும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளனர் என்றார்.


Next Story