8 மாதங்களுக்கு முன்பு நடந்த கொடூரக்கொலை: ஆபாச வீடியோ காட்டி வாலிபரை தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலி
8 மாதங்களுக்கு முன்பு நடந்த கொடூரக்கொலையில் கைதான கள்ளக்காதலி ஆபாச வீடியோ காட்டி வாலிபரை தீர்த்துக்கட்டியதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மது என்ற மாடசாமி (வயது 24). இவர் கடந்த அக்டோபர் மாதம் திடீரென்று மாயமானார்.
இதுகுறித்து அவரது தந்தை இலத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
கடந்த 4-ந் தேதி அதே தெருவில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பராமரிப்பு பணி நடைபெற்றது. வீட்டில் கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்தபோது, அதில் மனித எலும்புக்கூடு கிடந்தது.
போலீஸ் விசாரணையில், எலும்புக்கூடாக கிடந்தவர் காணாமல் போன மாடசாமி என்பது தெரியவந்தது. மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கள்ளக்காதலியான அதே கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பிரியா (24) மற்றும் அவரது தாயார் மாரியம்மாள் (42), 17 வயது தம்பி ஆகியோரை போலீசார் கோவையில் வைத்து நேற்று முன்தினம் பிடித்து கைது செய்தனர். பின்னர் இலத்தூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆபாச வீடியோ காண்பித்து..
போலீசாரிடம் பிரியா அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனக்கும், உறவுக்காரரான எதிர்வீட்டை சேர்ந்த மாடசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் மாடசாமி எனது வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்தார்.
மேலும் அடிக்கடி வந்து உல்லாசத்துக்கு அழைத்து தொந்தரவு செய்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாடசாமி இரவில் எனது வீட்டிற்கு வந்தார்.
அப்போது, அவரிடம் செல்போனில் ஆபாச வீடியோ காண்பித்து அதில் உள்ளது போல் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து மாடசாமியின் கை, கால்களை இறுக்கி கட்டினேன். அவரும் உல்லாசத்துக்கு தான் இவ்வாறு செய்கிறார் என்று நினைத்து எதுவும் சொல்லவில்லை.
பின்னர் நான், மாடசாமி அருகில் சென்று அவரது கழுத்தை நெரித்தேன். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அருகில் கிடந்த தலையணையை எடுத்து அவரது முகத்தில் அமுக்கினேன். இதில் துடிதுடித்து சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.
கழிவுநீர் தொட்டியில் வீச்சு
பின்னர் எனது தாய் மற்றும் தம்பி ஆகியோரின் உதவியுடன் வாடகைக்கு வசித்த வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி 3 பேரும் சேர்ந்து மாடசாமியின் உடலை தூக்கி கழிவுநீர் தொட்டியில் வீசினோம். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
மறுநாள் வழக்கம் போல் வீட்டு வாசலில் கோலமிட்டு அக்கம்பக்கத்தினரிடம் சகஜமாக பேசி பழகினேன். இதனால் யாருக்கும் என் மீது சந்தேகம் ஏற்படவில்லை. மாடசாமியை அவரது வீட்டில் தேடினார்கள். எங்கு சென்றார் என்று தெரியாததால் அவரது தந்தை மாரிமுத்து தனது மகனை காணவில்லை என்று போலீசில் புகார் செய்தார்.
பின்னர் சில நாட்கள் கழித்து நான் வீட்டை காலி செய்துவிட்டு, தாயார், தம்பி, குழந்தைகளுடன் கோவைக்கு சென்றுவிட்டேன். எனினும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி எங்களை பிடித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு வாக்குமூலத்தில் பிரியா கூறிஇருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.