சென்னை ஐ.ஐ.டி.யில் 'பி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ்' படிப்பு அறிமுகம்: 25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் படிப்பு அறிமுகம்: 25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
x

தமிழ்நாடு மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்திக் கொள்கையின் மூலம் 2025-ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் மின்னணு தொழில் உற்பத்தியை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை,

தமிழ்நாடு மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்திக் கொள்கையின் மூலம் 2025-ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் மின்னணு தொழில் உற்பத்தியை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதனை நிறைவேற்றும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. பி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் என்ற புதிய படிப்பை அறிமுகம் செய்து உள்ளது.

இந்த 4 ஆண்டுகால பட்டப்படிப்பை ஆன்லைன் மூலம் படிக்கலாம். இந்த படிப்புக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. நுழைவுத்தேர்வும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. இந்த படிப்பை முடிப்பவர்கள் இந்தியாவில் எலக்ட்ரானிக் சாதனங்கள் உற்பத்தி துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை பெற முடியும்.

பிளஸ்-2 வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் படித்த யார் வேண்டுமானாலும் இந்த ஆன்லைன் படிப்பில் சேரலாம். இந்த படிப்பை அவர்கள் முடிக்கும் சூழலுக்கு ஏற்ப, அடிப்படை சான்றிதழ் பட்டம், டிப்ளமோ பட்டம், பி.எஸ். பட்டம் என வெவ்வேறு நிலைகளில் பெறலாம்.

பாடத்தின் உள்ளடக்கம், பயிற்சிகள், சந்தேகங்களை தீர்க்கும் அமர்வுகள், அசைன்மெண்ட்கள் ஆகியவற்றை ஆன்லைன் வாயிலாகவும், கேள்வி-பதில்கள், தேர்வுகள், ஆய்வக வகுப்புகள் ஆகியவற்றை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேரடியாகவும் நடத்தப்பட உள்ளன. இந்த படிப்பில் சேருவதற்கு வருகிற 25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு ஜூலை மாதத்தில் இருந்து வகுப்புகள் தொடங்கப்படும் என்று சொல்லப்பட்டு உள்ளது.

இந்த படிப்பு சற்று கடினமானது என்றாலும், படிப்பவர்கள் நெகிழ்வுத் தன்மையுடன் கற்றுக்கொள்வதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாக்கப்படும் என்றும், இதில் பட்டம் பெறும் மாணவர்கள் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைனர், எம்பெடட் சிஸ்டம் டெவலப்பர், எலக்ட்ரானிக் ஹார்டுவேர் ஸ்பெஷலிஸ்ட், சிஸ்டம் டெஸ்டிங் என்ஜினீயர், எலக்ட்ரானிக்ஸ் ரிசர்ச் என்ஜினீயர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.


Next Story