நெல்லை மாநகராட்சியில் குடிநீர், ஆரம்ப கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.312.80 கோடியில் பட்ஜெட் தாக்கல்


நெல்லை மாநகராட்சியில் குடிநீர், ஆரம்ப கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.312.80 கோடியில் பட்ஜெட் தாக்கல்
x

நெல்லை மாநகராட்சியில் குடிநீர், ஆரம்ப கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.312.80 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சியில் உள்ள 32 பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் குடிநீர், ஆரம்ப கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.312.80 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சியில் உள்ள 32 பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

பட்ஜெட் கூட்டம்

நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேயர் பி.எம்.சரவணன் பதவி ஏற்ற பின்னர் முதல் நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

93 கட்டிட பணிகள்

நெல்லை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வருவாய் மூலதன நிதியின் கீழ் 93 கட்டிட பணிகள் ரூ.8 கோடியே 44 லட்சம் மதிப்பில் எடுத்து கொள்ளப்பட்டு 39 கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. 31 பணிகள் நடந்து வருகிறது. ஒப்பந்த புள்ளிக்காக 23 பணிகள் உள்ளது. மாநகராட்சியில் 44 சிறுபாலங்கள் கட்ட ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பில் எடுத்து கொள்ளப்பட்டு 14 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. ரூ.4 கோடியே 65 லட்சத்தில் 59 மழைநீர் வடிகால் பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு 12 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. 26 பணிகள் நடைபெற்று வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகள் ரூ.42 லட்சத்திலும், புதை வடிகால் பராமரிப்பு பணிகள் ரூ.61 லட்சத்திலும் நடந்து வருகிறது.

163 குடிநீர் திட்டப்பணிகள் ரூ.4 கோடி மதிப்பில் எடுக்கப்பட்டு 112 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. பூங்கா பராமரிப்பு, பயணிகள் நிழற்குடை, மின்விளக்கு, கணினி, மின்கலம், செயலி மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.4 கோடியே 2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 15-வது நிதிக்குழு மானியத்தில் நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மைய கட்டிடங்கள், திரவ எரிவாயு தகன மேடைகள், வடிகால் பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பாலங்கள் அமைக்கும் பணிகள் ரூ.42 கோடியே 70 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாதாள சாக்கடை பணிகள்

அம்ருத் திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு 2 பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு ரூ.960 கோடி மதிப்பீட்டில் தேர்வு செய்யப்பட்டு நிலை 2-க்கான பாதாள சாக்கடை திட்டப்பணி 86 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள நிலை 3-க்கான பணிக்கு ஒப்பந்த புள்ளி பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.

மூலதன மானிய நிதியின் கீழ் ராமையன்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்ய பெறப்படும் கழிவுநீரின் அளவு, அதன் தன்மை மற்றும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரின் அளவு அதன் தன்மை பகுப்பாய்வு செய்து நிகழ்நிலை தொடர்ச்சியான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தும் பணி ரூ.58 லட்சத்தில் நடந்து வருகிறது.

அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம்

அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட பணி ரூ.295 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 95 சதவீத பணிகள் முடிவுற்றன. மீதமுள்ள பணிகள் இந்த நிதியாண்டில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு தங்கும் விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ராம் திட்டத்தின் கீழ் பொது சேவை மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது கழிப்பிடங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 84 பணிகள் ரூ.965 கோடி மதிப்பீட்டில் தேர்வு செய்யப்பட்டு 54 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ.24 லட்சம் பற்றாக்குறை

நெல்லை மாநகராட்சியில் 2023-2024-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் வருவாய், குடிநீர், ஆரம்ப கல்விக்கான நிதி வருவாயாக ரூ.312.56 கோடியாக திட்டமிடப்பட்டு வருவாய், குடிநீர், ஆரம்ப கல்விக்காக ரூ.312.80 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வரவு-செலவு அறிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.24 லட்சம் பற்றாக்குறையாக உள்ளது.

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 32 பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை தலைமை ஆசிரியர் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கவும், கூடுதலாக 2 கருத்தடை மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் தாமிரபரணியை அழகுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். தூய்மை பணியாளர்களுக்கு உயிர் காக்கும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

நுழைவு கட்டணம்

பசுமை நெல்லை திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். மாநகராட்சி கட்டிட சுவர்களில் வர்ணம் பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மக்களை தேடி மாநகராட்சி திட்டம் செயல்படுத்தப்படும். பீடி தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, சாலையோர மாற்றுத்திறனாளிகளுக்கு விற்பனை வண்டிகள் வழங்கும் திட்டம், மாநகருக்குள் நுழையும் கனரக சரக்கு வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலித்தல் ஆகியவை செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானங்கள்

இதைத்தொடர்ந்து, பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை மருத்துவமனை அருகே கட்டப்பட்டு உள்ள பல்நோக்கு மையத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும். கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நெல்லை மாநகர எல்லை பகுதியில் மாநகராட்சி சார்பில் கருணாநிதி நுற்றாண்டு வளைவு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 29 தி.மு.க. கவுன்சிலர்களும், 3 அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.


Next Story