ஜூன் மாதத்தில் நாகர்கோவிலுக்கு புத்தன் அணை தண்ணீர் வினியோகம்மேயர் மகேஷ் பேட்டி


ஜூன் மாதத்தில் நாகர்கோவிலுக்கு புத்தன் அணை தண்ணீர் வினியோகம்மேயர் மகேஷ் பேட்டி
x

ஜூன் மாதத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புத்தன் அணை தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்று மேயர் மகேஷ் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஜூன் மாதத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புத்தன் அணை தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்று மேயர் மகேஷ் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

நாகர்கோவில் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.251 கோடி மதிப்பீட்டில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. புத்தன் அணையில் இருந்து நாகர்கோவில் வரை குழாய்கள் அமைத்த நிலையில், நாகர்கோவில் மாநகரில் புதிதாக வீட்டுக்குள்ள இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதே போல பாதாள சாக்கடை திட்ட பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிப்பது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை என்ஜினீயர் ரகுபதி, கண்காணிப்பு பொறியாளர் மைக்கேல் சேவியர், செந்தூர் பாண்டியன் மற்றும் செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புத்தன் அணை தண்ணீர்

கூட்டம் முடிந்ததும், மேயர் மகேஷ் கூறியதாவது:-

புத்தன் அணை தண்ணீரை மே 31-ந்தேதிக்குள் நாகர்கோவில் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

ஜூன் மாதம் முதல் புத்தன் அணை தண்ணீர் நாகர்கோவில் மாநகரில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள இணைப்புகள் மூலம் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து அனைத்து வீடுகளுக்கும் புதிய இணைப்புகள் மூலம் குடிநீரை வழங்குவதற்காக தலா ரூ.8.30 கோடி மதிப்பீட்டில் 2 பகுதிகளாக மொத்தம் ரூ.16.60 கோடியில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

ஒரு சில மாதங்களுக்குள் வீட்டு வாசல் அருகே இருக்கும் இணைப்பில் இருந்து முறைப்படி வீட்டுக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

பாதாள சாக்கடை திட்ட பணிகளை பொறுத்த வரை வலம்புரிவிளை கிடங்கில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கி ஒரு சில மாதங்களுக்குள் சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் நாகர்கோவில் மாநகரின் பிரதான இரு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதற்காக அனைத்து நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை என்ஜினீயர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story