கொள்ளிடம் ஆற்றின் கரையில் தடுப்புச்சுவர் கட்ட ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு
காட்டூர்-அளக்குடி இடையே கொள்ளிடம் ஆற்றின் கரையில் தடுப்புச்சுவர் கட்ட ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
கொள்ளிடம்:
காட்டூர்-அளக்குடி இடையே கொள்ளிடம் ஆற்றின் கரையில் தடுப்புச்சுவர் கட்ட ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
நிவாரணம் உதவி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் திட்டு, சந்தபடுகை, கீரங்குடி, மேலவாடி உள்ளிட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு கடந்த 10 நாட்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் முகாம்களில் உள்ள மக்களுக்கு கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நிவாரணம் உதவி வழங்கப்பட்டது.
813 பேருக்கு 10 கிலோ அரிசி
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். இதில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பயனாளிக்கு ரூ.4,800 மற்றும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக ரூ.4,800 மற்றும் 10 கிலோ அரிசி வீதம் 813 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கப்படும்.
ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு
கொள்ளிடம் அருகே அளக்குடியில் ஆற்றின் கரையை பலப்படுத்தவும் மற்றும் காட்டூர் கரையை பலபடுத்தவும் தடுப்புச்சுவர் அமைக்க ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆற்றின் கரையோர பகுதிகளில் புயல் பாதுகாப்பு மையம் கட்டிடம் கட்ட ராமலிங்கம் எம்.பி. ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு நிஷா, ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர் செல்லசேதுரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.