'பாலித்தீன் பைகளை பயன்படுத்தாத கிராமங்களை உருவாக்குங்கள்'


பாலித்தீன் பைகளை பயன்படுத்தாத கிராமங்களை உருவாக்குங்கள்
x

‘பாலித்தீன் பைகளை பயன்படுத்தாத கிராமங்களை உருவாக்குங்கள்’ என்று ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் விசாகன் அறிவுரை வழங்கினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரெங்கராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் விசாகன் பேசியதாவது:-

ஊராட்சிகளில் அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளை தொய்வின்றி முடிக்க வேண்டும். தெருவிளக்கு, சாலைகள், ஆக்கிரமிப்பு அகற்றுதல், குடிநீர் பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும்.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மக்கள் மஞ்சப்பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாத கிராமங்களை உருவாக்குங்கள். மேலும் திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்த்து தனிநபர் இல்ல கழிப்பிடம் அல்லது சமுதாய கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிய விரும்பும் அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் அடையாள அட்டை வழங்க வேண்டும். முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பள்ளி சமையல் கூடங்களை முறையாக பராமரிக்க வேண்டும். சமையல் கூடம் இல்லாத பள்ளிகளில் புதிய சமையல் கூடம் கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story