கம்பைநல்லூரில் பயன்பாடற்ற போலீஸ் குடியிருப்புகள்-வசிக்க முடியாமல் போலீசார் அவதி


கம்பைநல்லூரில் பயன்பாடற்ற போலீஸ் குடியிருப்புகள்-வசிக்க முடியாமல் போலீசார் அவதி
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:18+05:30)
தர்மபுரி

மொரப்பூர்:

கம்பைநல்லூரில் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ள போலீஸ் குடியிருப்புகளில் வசிக்க முடியாமல் போலீசார் அவதிப்பட்டு வருகின்றனர்.

கம்பைநல்லூர்

தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய நகர பகுதிகளில் ஒன்றாக கம்பைநல்லூர் பேரூராட்சி உள்ளது. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் வந்து செல்லும் வணிக மையமாக அமைந்துள்ள கம்பைநல்லூர், பழங்காலத்தில் மிகப்பெரிய சந்தை நடைபெறும் இடமாக விளங்கியது. இப்போதும் இங்கு நடக்கும் சந்தைக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வணிகர்கள் வந்து செல்கிறார்கள்.

அரூர், மொரப்பூர், தர்மபுரி, காரிமங்கலம், போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து மையமாக அமைந்துள்ள கம்பைநல்லூருக்கு பல்வேறு பணிகளுக்காக வெளியூர்களில் இருந்து தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். இங்கு உள்ள போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்பட மொத்தம் 38 போலீசார் பணிபுரிந்து வருகிறார்கள்.

பழுதடைந்த போலீஸ் குடியிருப்பு

இந்த போலீஸ் நிலையம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்பு, போலீசாருக்கான 11 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் போலீசார் குடும்பங்களுடன் வசித்து வந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த குடியிருப்புகள் பழுதடைய தொடங்கின. இதனால் இங்கு வசித்த போலீசார் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அதன்பின் பல ஆண்டுகளாக இந்த குடியிருப்புகள் பயன்பாடின்றி இருப்பதால் அங்கு புதர்கள் அடர்ந்து வளர்ந்து விட்டன.

இந்த குடியிருப்பு கட்டிடங்கள் போலீசார் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சிதிலமடைந்து வருகிறது. இந்த குடியிருப்புகளை சீரமைக்க கருத்துரு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ள இந்த குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக கம்பைநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

புதிய குடியிருப்புகள்

கே.ஈச்சம்பாடியை சேர்ந்த விவசாயி ராமஜெயம்:-

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கம்பைநல்லூர் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக இருந்ததால் இங்கு போலீசாரின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இங்கு பணிபுரியும் போலீசாரின் வசதிக்காக போலீஸ் நிலைய வளாகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்புகள் போலீசாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தன.

இந்தநிலையில் கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படும் இந்த குடியிருப்புகளில் போலீசார் தங்கள் குடும்பங்களுடன் வசிக்கும் சூழல் இல்லாமல் போய்விட்டது. பல ஆண்டுகளாக புதர் மண்டிய நிலையில் காணப்படும் போலீஸ் குடியிருப்புகளை இடித்து அகற்ற வேண்டும். இங்கு அனைத்து வசதிகளுடன் போலீசாருக்கு புதிய குடியிருப்புகளை கட்ட வேண்டும். அதன் மூலம் இந்த பகுதியின் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

நடைமுறை சிரமங்கள்

கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிங்காரவேல்:-

கம்பைநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் குற்ற செயல்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் போலீசாரின் தொடர் கண்காணிப்பு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் சுழற்சி முறையில் போலீசார் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். இங்குள்ள போலீஸ் குடியிருப்பு பராமரிப்பின்றி இருப்பதால் போலீசார் இங்கே குடும்பத்துடன் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு பணிபுரியும் போலீசார், வெளியிடங்களிலும், வெளியூர்களிலும் வசிப்பதால் பணியை முடித்து ஓய்வு எடுப்பதில் நடைமுறை சிரமங்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு காண இங்குள்ள பழைய போலீஸ் குடியிருப்பை இடித்து அகற்ற வேண்டும். போலீசாருக்கு புதிய குடியிருப்புகளை விரைவாக கட்ட வேண்டும்.

மன உளைச்சல் தவிர்க்கப்படும்

பெரமாண்டப்பட்டியை சேர்ந்த சங்கீதா ஜெகநாதன்:-

கம்பைநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் சமூக விரோத செயல்களை தடுப்பதில் போலீசாரின் பாதுகாப்பு பணி முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க இரவு, பகல் பார்க்காமல் காவல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே குடியிருப்புகள் இருப்பது அவசியம். அப்போது அவர்கள் குடும்பங்களையும் கவனித்து கொள்ள முடியும். மன உளைச்சல் தவிர்க்கப்படும்.

இதனால் பணியில் முழுமையாக கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு கம்பைநல்லூர் போலீஸ் நிலைய வளாகத்தில் நீண்ட காலமாக பழுதடைந்து உள்ள குடியிருப்புகளை இடித்து அகற்ற வேண்டும். இதே பகுதியில் போலீசாருக்கு புதிய குடியிருப்புகளை கட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story