தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.19 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.19 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.
சென்னை,
மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனை பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், தங்களது சமூக-பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளவும் இயலும் என்பதை கருத்தில்கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும்.
இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்க புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் ரூ.7 கோடியே 6 லட்சம் செலவிலும், திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ரூ.7 கோடியே 46 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டிடங்கள் மற்றும் விடுதி கட்டிடங்களை சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலமாக திறந்துவைத்தார்.
மகளிர் விடுதி கட்டிடம்
இதேபோல தர்மபுரியில் ரூ.3 கோடியே 20 லட்சம் செலவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிக் கட்டிடம், சென்னை அம்பத்தூரில் ரூ.1 கோடியே 7 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான சென்னை மண்டல இணை இயக்குனர் (பயிற்சி) அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் என ஒட்டுமொத்தமாக ரூ.18 கோடியே 80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ.வீர ராகவ ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.