ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகளை முறைப்படி ஏலம் விட வேண்டும் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகளை முறைப்படி ஏலம் விட வேண்டும் என அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.
ரிஷிவந்தியம்,
வாணாபுரம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபுவிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வாணாபுரம் பகண்டை கூட்டுரோட்டில் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. ஆனால், ஏலம் எடுத்த நபர்கள் கடைகளை வைத்து நடத்தாமல், வேறு நபர்களுக்கு உள்வாடகைக்கு கொடுத்து வாடகையும் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வணிக வளாக கடைகளை முறைப்படி ஏலம் விட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.