ஒலகாசி கிராமத்தில் காளை விடும் விழா


குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி கிராமத்தில் நேற்று காளை விடும் விழா நடந்து. பிராணிகள் நல வாரிய உறுப்பினர் ஆய்வு ஆய்வு செய்தார்.

வேலூர்

காளை விடும் விழா

குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி கிராமத்தில் 21-ஆம் ஆண்டு காளை விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

நிகழ்ச்சியில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றபின் காளை விடும் விழா தொடங்கியது. கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்ததை தொடர்ந்து காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.

6 பேருக்கு காயம்

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து காளைகள் ஓடுவதைப் பார்த்து ரசித்தனர். காளைகள் முட்டியதில் 6 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த ஒருவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

வெற்றி பெற்ற 71 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊராட்சி பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

பிராணிகள் நல வாரிய உறுப்பினர் ஆய்வு

காளை விடும் விழா நடைபெற்றபோது தேசிய பிராணிகள் நல வாரிய உறுப்பினர் மித்தல் அங்கு வந்து ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அவர் காளைகளை கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும், காளைகளின் கொம்புகளுக்கு சிறு சிறு கவசங்கள் அணிவிக்க வேண்டும், காளைகள் ஓட கிளிப்புகள் பொருத்தக் கூடாது, இரு புறமும் சரியான அளவில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுகளை விழா குழுவினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வழங்கினார்.


Next Story