அரிமளம், திருமயத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்


அரிமளம், திருமயத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

பங்குனி திருவிழாவையொட்டி அரிமளம், திருமயத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அரிமளம் ஒன்றியம் பெருங்குடி வேண்டி வந்த அம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயம் பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. பெரியமாடு பிரிவில் 39 மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. இந்த போட்டி பெருங்குடி ராயவரம் சாலையில் செங்கீரை வரை நடைபெற்றது. பெரிய மாடு போக வர 8 மைல் தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட மாடுகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.

பெரிய மாடு பிரிவில் முதல் பரிசை பெருங்குடி ராஜாங்கமும், 2-வது பரிசை ஏத்தநாடு சீனி, 3-ம் பரிசு அரிமளம் சேர்த்து மேல்செல்லஅய்யனார், 4-ம் பரிசு தேனி கூழையனூர் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

நடுமாடு பிரிவில் 7 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் போட்டி தூரமாக 7 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் முதல் பரிசை ஓணாங்குடி அஸ்ரப் அலி, 2-ம் பரிசு கானாடுகாத்தான் சோலை ஆண்டவர், 3-வது பரிசு பீர்களைகாடு பைசல், 4-ம் பரிசு பிராமணவயல் ஷிவானி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன.

கரிச்சான் மாடு போக வர 5 மைல் தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசு செப்பவயல் சிவசக்தி, 2-ம் பரிசு கொத்தமங்கலம் சேகர், 3-ம் பரிசு பரமந்தூர் குமார், 4-ம் பரிசு பீர்களைக்காடு பெரியசாமி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன.

பூஞ்சிட்டு மாடு போக வர 5 மைல் தூரம் போட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 21 மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசு பிடாரிக்காடு குட்டி ஆண்டவர், சுண்ணாம்புயிருப்பு கண்ணன், 2-ம் பரிசு அரசர்குளம் சுகந்தி அம்மன், ஈளக்குடிபட்டி சங்கப்பத்தேவர், 3-ம் பரிசு பொய்யாதநல்லூர் அயன் அசாம், கண்டாடிப்பட்டி கூத்தன், 4-ம் பரிசு திருவிடைச்சேரி சாத்தையா, கொத்தமங்கலம் சேகர் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன. இதையடுத்து, வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பை, குத்துவிளக்கு ஆகியவை வழங்கப்பட்டன.

முத்துமாரியம்மன் கோவில்

திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இருபிரிவாக நடத்தப்பட்டது. பெரிய மாடு பிரிவில் 6 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில், முதல் பரிசை குளத்துப்பட்டி சாமி சுரேஷ், 2-ம் பரிசு மாவூர் ராமச்சந்திரன், 3-ம் பரிசு விராமதி தையல்நாயகி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டன. போட்டி நடைபெற்ற திருமயம்- ராயவரம் சாலை இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story