திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்


திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x
தினத்தந்தி 16 Sept 2022 12:14 AM IST (Updated: 16 Sept 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

திருமயம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திருமயம் அருகே உள்ள முருகாண்டிப்பட்டி செல்வ விநாயகர், பாலதண்டாயுதபாணி, பாலகணபதி கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி மாட்டு வண்டி எல்லை பந்தயம் நேற்று நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை. தேனி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடத்தப்பட்டன. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 12 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் கலந்து கொண்ட காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. இந்த போட்டியில் முதல் பரிசு அம்மன்பேட்டை சகாயராணி, 2-ம் பரிசு கொத்தமங்கலம் சேகர், 3-ம் பரிசு ஆத்தங்குடி கண்ணாத்தாள், 4-ம் பரிசு பட்டங்காடு அடைக்கலம் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

பரிசுகள்

இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 17 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதன் பந்தய தொலைவு போய் வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசு செல்வநேந்தல் சுந்தர்ராஜன், 2-ம் பரிசு வைரிவயல் வீரமணி ஆண்டவர், 3-ம் பரிசு செம்மினிபட்டி ஆனந்தன், 4-ம் பரிசு கருவிடைசேரி சாத்தையா ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.

பந்தயம் நடைபெற்ற விராச்சிலை- செங்கீரை சாலையில் இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். பனையப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story