மாசி களரி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
மாசி களரி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே காணிக்கூர், ஒச்சத்தேவன் கோட்டைகிராமத்தில் பாதாள காளியம்மன் கோவில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுத்து நகர்வலம் வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கரகாட்டம், வள்ளி திருமணம், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகங்கள் நடைபெற்றன. கிராம பொதுமக்கள் சார்பில் பொது அன்னதானம் நடைபெற்றது.
நிறைவு நாளான நேற்று இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை கடம்பூர் கருணாகராஜா என்பவரது மாடு பெற்றது. இரண்டாம் பரிசு ஓரியூர் செல்வம், கொத்தாவயல் கார்த்திக் மாடுகள் பெற்றன. மூன்றாம் பரிசை மருங்கூர் அப்துல், காதர் முகமது ஆகியோர் மாடுகள் பெற்றன. நான்காம் பரிசை காணிக்கூர் வேல்முருகன் நினைவாக ஒச்சத்தேவன் கோட்டை வேலு மற்றும் மஞ்சநாயக்கன்பட்டி வீரஜோதி என்பவரது மாடுகள் பெற்றன. சின்ன மாட்டு பந்தயத்தில் முதல் பரிசை பூலாங்கால் அசன், அப்புரக்குட்டி, என்பவரது மாடுகள் பெற்றன. இரண்டாம் பரிசை கள்ளிக்குளம் இலந்தைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் வீர முனியசாமி என்பவரது மாடும், மூன்றாம் பரிசை கொத்தவயல் கார்த்திக் என்பவரது மாடும், நான்காம் பரிசை வீரக்குடி முருகன் மேலச்செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி மாடுகளும் பெற்றது. இதேபோல் பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை காணிக்கூர், ஒச்சத்தேவன் கோட்டை கிரா மக்கள், தேவர் இளைஞர் நற்பணி மன்றம், பாதாள காளியம்மன் பக்த சபை, கிராமமக்கள் செய்திருந்தனர்.