எருது விடும் விழாவுக்கு தயாராகும் காளைகள்
வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாவுக்கு காளைகள் தயாராகி வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாவுக்கு காளைகள் தயாராகி வருகின்றன.
எருது விடும் விழா
தமிழகத்தில் ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பரியமாக நடத்தப்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட இடங்களில் மிகவும் கோலாகலமாக நடத்தப்படுகிறது. அதேபோல் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படும் காளை விடும் திருவிழா நடத்தப்படுகிறது. இதனை எருது விடும் திருவிழா என்றும் அழைக்கின்றனர். இதற்காக அதிகளவில் காளை மாடுகள் வளர்க்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக கணியம்பாடி, அடுக்கம்பாறை, காட்பாடி, லத்தேரி, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஊசூர், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பகுதிகளிலும் காளைகள் அதிகளவில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் எருது விடும் விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தயாராகும் காளைகள்
பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இதனால் காளைகளின் உரிமையாளர்கள், காளைக்கு நீச்சல், மண் குவியலை கிளறுதல், நடை பயிற்சி, ஓட்டம் உள்ளிட்டவைகளை அளிக்கின்றனர். இந்த பயிற்சிகளை பெறும் காளைகள் மட்டுமே விழாவில் எளிதில் வெற்றி பெறும் என்று அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி காளைகளுக்கு நவதானிய கூழ், தவிடு, புண்ணாக்கு, பால், நாட்டுக்கோழி முட்டை உள்ளிட்ட சத்துள்ள உணவுகளையே கொடுக்கின்றனர்.
மேலும் காளைகளின் கொம்புகளை சீவி விடுதல், காலில் லாடம் அடித்தல் உள்ளிட்ட பணிகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றனர். காளைவிடும் திருவிழாவில் பங்கேற்க தயார்படுத்தும் காளைகள் ஒரு வருடமே ஆன சிறிய கன்றுக்குட்டியில் இருந்து வளர்க்கப்படுகிறது. இந்த காளைகள் குறிப்பிட்ட பருவத்தை எட்டிய பிறகே விழாவில் பங்கேற்கின்றன. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இதுபோன்ற காளை மாடுகளுக்கு தனி மவுசு உண்டு. எனவே இந்த மாடுகளை அதன் உரிமையாளர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக வேலூர் மாவட்டத்திலேயே ரூ.20 லட்சம் வரை காளைகள் விலைபோவதாக கூறப்படுகிறது. காளைகள் விலை அதிகமாக இருந்தாலும், ஒரு சிலர் காளைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர். காளைகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் பொங்கல் பண்டிகை எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.