காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்
தர்மபுரி அருகே தடங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டி அடக்கினர். மேலும் வேடிக்கை பார்த்த சிறுவன் மாடு முட்டி பலியானான்.
நல்லம்பள்ளி
ஜல்லிக்கட்டு
தர்மபுரி மாவட்டம் அதியமான் தலைமை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 2-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தர்மபுரி அருகே தடங்கம் பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு நடந்த தொடக்க விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
இதையடுத்து கலெக்டர் போட்டி விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வாசிக்க அதனை மாடுபிடி வீரர்கள் பின்தொடர்ந்து படித்து உறுதிமொழியை எடுத்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
சீறிப்பாய்ந்த காளைகள்
இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 8 சுற்றுகளாக நடந்த போட்டியில் மொத்தம் 628 காளைகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். பார்வையாளர்கள் கண்டுகளிக்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக குரல் எழுப்பியபடி ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.
வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறி பாய்ந்தபடி வந்தன. காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். பல காளைகள் தங்களை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களுக்கு சவால் விட்டு பிடிபடாமல் அசுர வேகத்தில் ஓடின.
57 பேர் காயம்
அதே நேரத்தில் பல காளைகளின் திமிலை பிடித்த மாடுபிடி வீரர்கள் காளையை அடக்கி தங்கள் வீரத்தையும், திறமையையும் வெளிப்படுத்தினர். அடங்காமல் திமிறியபடி சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை வீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்ககாசு, குக்கர், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் மற்றும் பல்வேறு வகையான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் 57 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 10 பேர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையொட்டி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பார்வையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
2 பேர் முதல் பரிசை வென்றனர்
போட்டிகளின் முடிவில் 19 காளைகளை அடக்கி மதுரை மாவட்டம் விளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (வயது 25), குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த திவாகர் (22) ஆகிய 2 பேர் முதல் இடத்தை பிடித்தனர். இவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டியை சேர்ந்த கிரேந்திரன் (24), நத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (23) ஆகியோர் 16 காளைகளை அடக்கி 2-ம் இடத்தை பிடித்தனர். அவர்களுக்கு தலா 2 கிராம் தங்ககாசு பரிசு வழங்கப்பட்டது.
இதேபோல் திருச்சி மாவட்டம் சோபனாபுரத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரது காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. இதில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட தலைவர் தாபா சிவா, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் பெரியண்ணன், மாவட்ட துணை தலைவர்கள் கந்தசாமி, முத்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் உள்பட ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
மாடு முட்டி சிறுவன் பலி
ஜல்லிக்கட்டு போட்டியின்போது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூக்கடை வியாபாரி சீனிவாசன் என்பவரின் மகன் கோகுல் (14) அங்கு நின்ற காளைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென ஒரு மாடு மிரண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கோகுலை முட்டியது. இதில் வயிற்றில் கொம்பு குத்தி படுகாயம் அடைந்த கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். அவனது உடலை பார்த்து தந்தை சீனிவாசன், தாய் கவுரம்மாள் ஆகியோர் கதறி அழுதது கண்போர் கண்களை குளமாக்கியது.
இதையடுத்து கனத்த இதயத்துடன் மகனின் கண்களை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.