விற்பனைக்கு குவிந்த பண்ருட்டி பலாப்பழங்கள்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் பகுதிக்கு விற்பனைக்கு பலாப்பழங்கள் வந்து குவிந்து வருகின்றன. இந்த பலாப்பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
கும்பகோணம்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் பகுதிக்கு விற்பனைக்கு பலாப்பழங்கள் வந்து குவிந்து வருகின்றன. இந்த பலாப்பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
பலாப்பழம்
மா, பலா, வாழை முக்கனிகள் ஆகும். இந்த முக்கனிகளில் முதன்மையானது பலாப்பழம். பலாப்பழங்கள் அளவில் பெரியவை, சுவையில் அருமையானவை. அதிலும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பலாப்பழங்களின் ருசிக்கு மக்களிடையே தனி மவுசு உண்டு.
தமிழ்நாட்டில் கடலூர் தவிர கன்னியாகுமரி, திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து பலாப்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.இந்த பகுதிகளில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பலாப்பழங்கள் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கும்பகோணத்தில் குவிந்தது
தற்போது தமிழகத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியதை முன்னிட்டு பலாப்பழ விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வியாபாரிகள் மொத்தமாகவும், தள்ளுவண்டி கடைக்காரர்கள் சில்லறை விற்பனையாகவும் பலாப்பழத்தை விற்பனை செய்கின்றனர்.
அதன்படி கும்பகோணம் பகுதிக்கு பண்ருட்டியில் இருந்து பலாப்பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவை தாராசுரம் காய்கறி மார்க்கெட் முன்பு சாலையோரத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் ஆர்வம்
இந்த பலாப்பழத்தின் நறுமணம் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை ஒரு நிமிடம் ஈர்த்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் பலாப்பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பலாப்பழங்கள் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சிறிய பழம் ரூ.50 முதல் பெரிய பழங்கள் ரூ.300 வரை விற்பனையாகிறது.
இதுகுறித்து பலாப்பழ வியாபாரி பரமசிவம் கூறுகையில்:- எனக்கு வயது 65. நான் 40 வருடங்களுக்கு மேலாக பலாப்பழம் விற்பனை செய்து வருகிறேன். எனது தோட்டத்தில் இருந்து பழங்களை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளேன்.
ருசி அதிகம்
ஒவ்ெவாரு மரமும் பருவத்துக்கு 150 முதல் 250 பழங்கள் வரை தரும். அவற்றை தமிழகம் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, மும்பை ஆகிய பகுதிகளுக்கும் பழங்களை ஏற்றுமதி செய்கிறோம்.
கடைகள், சாலையோரத்தில் பழம் விற்பனை செய்பவர்கள் அனைவரும் பண்ருட்டி பலாப்பழத்தில் ருசி அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். அதனால் நல்ல விற்பனையும், எங்களுக்கு போதுமான லாபமும் கிடைக்கிறது. இதன்காரணமாக தற்போது கும்பகோணத்தில் விற்பனையை தொடங்கி உள்ளோம் மக்களும் ஆர்வமுடன் பலாப்பழங்களை வாங்கி செல்கின்றனர் என தெரிவித்தார்.