கோவில்பட்டியில்ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் திருட்டு
கோவில்பட்டியில்ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் தங்க, வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி இனாம்மணியாச்சி மீனாட்சி நகர் 6-து தெருவில் குடியிருப்பவர் அழகர்சாமி மகன் ராஜாராம் மோகன் ராய் (வயது 63). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.
இவர் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று காலையில் திரும்பினார். வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அறை கதவுகள், பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 3 பவுன் தங்க காசு, 2 வெள்ளி குத்து விளக்குகள் திருடப்பட்டு இருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சமாகும். பூட்டிய வீட்டிற்குள் மர்ம நபர் புகுந்து கைவரிசை காட்டி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்- இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு்பபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த வீட்டிற்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனின் தடையங்கள் மூலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.