மத்திய பாதுகாப்புப்படை பெண் போலீஸ் வீடு உள்பட மூன்று இடங்களில் திருட்டு


மத்திய பாதுகாப்புப்படை பெண் போலீஸ் வீடு உள்பட மூன்று இடங்களில் திருட்டு
x

ஒடுகத்தூரில் மத்திய பாதுகாப்புப்படை பெண் போலீஸ் வீடு உட்பட மூன்று இடங்களில் 33 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

வேலூர்

ஒடுகத்தூரில் மத்திய பாதுகாப்புப்படை பெண் போலீஸ் வீடு உட்பட மூன்று இடங்களில் 33 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

மத்திய பாதுகாப்புப்படை போலீஸ்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ஸ்ரீ பூபதி (வயது 33). நேமந்தபுரம் பகுதி ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.‌ இவரது மனைவி மாதவி. காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு படையில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் வந்திருந்த இவர் காஷ்மீர் செல்ல இருந்தார். அதனால் கணவர் ஸ்ரீ பூபதியுடன், பாலூரில் உள்ள தாய் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.

பூபதியின் தந்தை பாபு மற்றும் தாயார் வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் பாபு மற்றும் அவரது மனைவி வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தது.

நகை, பணம்திருட்டு

அதில் இருந்த தாலி சரடு உள்ளிட்ட 30 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.2 லட்சம் திருட்டு போனது தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து பூபதிக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த பூபதி திருட்டு குறித்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதேபோல் ஒடுகத்தூர் மேல்தெருவில் வசிக்கும் நவீன் மற்றும் அவரது மனைவி பவித்ரா (21) ஆகியோர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் கீழ் தளத்தில் உள்ள வீட்டை பூட்டிக்கொண்டு, மாடியில் தூங்கி உள்ளனர். அதிகாலையில் காய்கறி வாங்குவதற்காக கீழே வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது.

செல்போன் கடை

அதேபோன்று குருவராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜானகி ராமன் என்பது மகன் சரவணன் (26). குருவராஜ பாளையம் பஸ் நிறுத்தம் அருகே செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 8 மணிக்கு கடைக்கு வந்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, கடையில் இருந்த விலை உயர்ந்த லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து ஸ்ரீ பூபதி, நவீன், மற்றும் சரவணன் ஆகிய 3 பேர் தனித்தனியாக வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன், வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

ஒரே இரவில் ஒடுகத்தூர் பகுதியில் 3 இடங்களில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் பெரும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story