மேல்மலையனூர் அருகேவீட்டு கதவை உடைத்து திருட்டு
மேல்மலையனூர் அருகே வீட்டு கதவை உடைத்து மா்ம மனிதா்கள் திருடி சென்றுவிட்டனா்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே சாத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). சென்னை கோயம்பேடு போக்குவரத்து பணிமனையில் நேரக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேவி (40). இவர் சாத்தாம் பாடியில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று தேவி வீட்டைப் பூட்டிவிட்டு, தனது கணவரை பார்க்க சென்னைக்கு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதனிடையே, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பது குறித்து அந்த பகுதியினர் தேவிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அவர் நேரில் வந்து பார்த்த போது, வீட்டில் பீரோவில் இருந்த 180 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தேவி கொடுத்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கிராமத்தில் திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.