காருக்குள் சிக்கி பலியான 3 குழந்தைகள் உடல் அடக்கம்; கிராமமே சோகத்தில் மூழ்கியது
பணகுடி அருகே, காருக்குள் சிக்கி பலியான 3 குழந்தைகள் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
பணகுடி:
பணகுடி அருகே, காருக்குள் சிக்கி பலியான 3 குழந்தைகள் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
3 குழந்தைகள் பலி
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த லெப்பைகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். பொக்லைன் ஆபரேட்டர். இவருக்கு நித்திஷா (வயது 6) என்ற மகளும், நித்திஸ் (4) என்ற மகனும் இருந்தனர். இவர்களது வீட்டின் அருகே இவரது அண்ணனான மணிகண்டன் என்பவரது கார் நிறுத்தப்படுவது வழக்கம்.
நாகராஜனின் மனைவி தனது குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது அந்த காரில் அமர வைத்து சாப்பாடு கொடுப்பார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் பார்த்தபோது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த நித்திஷா, நித்திஸ் மற்றும் நாகராஜன் வீட்டின் அருகேயுள்ள உறவினர் சுதன் என்பவரது குழந்தையான கபிஷாந்த் (4) ஆகிய 3 பேரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அக்கம்பக்கத்தில் தேடினர். இந்த நிலையில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் சிக்கி, மயங்கிய நிலையில் 3 குழந்தைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். மயக்க நிலையில் இருந்த குழந்தைகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பணகுடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் சூப்பிரண்டு
3 குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமயசிங் மீனா விசாரணை நடத்தி வருகிறார்.
சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார். காருக்குள் குழந்தைகள் சிக்கித்தவித்து இறந்ததால் கண்ணாடியில் பதிவான கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் பதிவு செய்தனர்.
சோகத்தில் மூழ்கிய கிராமம்
3 குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மதியம் 2 மணி அளவில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதன்பின்பு 3 குழந்தைகளின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.
3 நாட்களுக்கு முன்பு தான் நித்திஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை உறவினர்கள் சொல்லி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் பலியான சம்பவம் லெப்பைகுடியிருப்பு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.