மயானத்தில் மட்டும் இறந்தவர்களின் உடலை புதைக்க வேண்டும்: 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு தீர்ப்பு
மயானம் என்று அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் உடல்களை புதைக்க வேண்டும் என்றும், வேறு எந்த இடங்களிலும் புதைக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேர் கொண்ட முழு அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம், நொச்சிலி கிராமத்தை சேர்ந்தவர் பாபு நாயுடு என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், ''எங்களது கிராமத்தில், இறந்தவர்களின் உடலை எரிக்கவும், அடக்கம் செய்யவும் தனியாக மயானம் உள்ளது. ஆனால் எங்களது கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ்வரி என்பவர், இறந்த அவரது கணவரின் உடலை சட்டவிரோதமாக தன்னுடைய பட்டா நிலத்தில் புதைத்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பட்டா நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டியெடுத்து, மயானத்தில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
3 நீதிபதிகள்
இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில், ஜெகதீஷ்வரி மேல்முறையீடு செய்தார். இறந்தவரின் உடலை பட்டா நிலத்தில் அடக்கம் செய்ய முடியுமா, முடியாதா என்பது குறித்து மாறுபட்ட தீர்ப்புகள் இருந்ததால், இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதன்படி, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜி.ஜெயச்சந்திரன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பி்த்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து (மயானம்) விதி 1999-ன் படி, கிராமத்தில் மயானம் இருக்கும்போது, அதில் உடலை புதைக்காமல், வேறு இடத்தில் உடலை புதைக்க முடியுமா? என்பது குறித்து இந்த வழக்கில் தீர்வு காண வேண்டியதுள்ளது.
முன்அனுமதி
பஞ்சாயத்து விதி 5-ன்படி, மயானம் இல்லாத புதிய இடங் களில் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. ஒருவேளை தனியார் அல்லது பொது இடத்தில் உடலை புதைக்கவோ, எரிக்கவோ வேண்டும் என்றால், முறையான முன் அனுமதியை பெறவேண்டும்.
விதி 6-ன்படி, மயானம் என்று அறிவிக்கப்பட்ட இடம் குறித்து கிராம பஞ்சாயத்து நிர்வாகம் பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.எனவே, பஞ்சாயத்து சட்டபடி மயானம் என ஒதுக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவேண்டும். அதை தவிர பிற இடங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாது.
செலவுத் தொகை
சட்டவிரோதமாக மயானம் அல்லாத நிலத்தில் உடல் புதைக்கப்பட்டிருந்தால், பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு புதைக்கப்பட்ட உடலை தோண்டியெடுத்து, மயானத்தில் புதைக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.