மழை இன்றி கருகும் நெற் பயிர்கள்
இளையான்குடியில் மழை இன்றி நெற் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இளையான்குடி,
இளையான்குடியில் மழை இன்றி நெற் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கருகும் நெற் பயிர்கள்
இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 11252 ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பெய்த மழையை பயன்படுத்தி இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடன் வாங்கி நெல் பயிரிட்டனர். இதையொட்டி நெல் பயிருக்கு உரமிட்டு, களை எடுத்து, பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட் பணிகளை மேற்கொண்டனர். இதனால் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20,000-க்கு மேல் செலவு செய்துள்ளனர். தற்போது பயிர் வளர்ந்து கதிர்விடும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் எதிர்பார்த்த அளவு இளையான்குடி பகுதியில் மழை இல்லாததால் தண்ணீரின்றி நெற் பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நெல் பயிருக்காக கிராம நிர்வாக அலுவலர் மூலம் அடங்கல் வாங்கி தொடக்க வேளாண் வங்கி மூலமாக பயிர் கடனும் பெற்றுள்ளனர். கடன் பெற்ற விவசாயிகள் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீடும் செய்துள்ளனர். கடன் பெறாத விவசாயிகள் ஆன்லைன் மூலம் நெல் பயிருக்கான காப்பீடு செய்துள்ளனர்.
கோரிக்கை
நெற் பயிர்கள் வளர்ந்து பயிர்விடும் நேரத்தில் மழை இல்லாததால் கருகி அழிந்து போகும் நிலையில் உள்ளது. அதேபோல் வைகை பாசனத்தில் உள்ள விவசாயிகளுக்கு கண்மாயில் தண்ணீர் இருந்தும் மடைகள் சேதம் அடைந்துள்ளதாலும், பாசன வாய்க்கால் சீரமைக்கப்படாமல் உள்ளதாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை அதிகாரிகள் மூலம் நெல் பயிரிட்ட விளை நிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்துள்ள கடன் பெற்ற, கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு பெற்று தர மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையின் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளையான்குடி வட்டார கிராமங்களான சோதுகுடி, கண்டனி, நெஞ்சத்தூர், கரும்புக்கூட்டம், கருஞ்சுத்தி, வடக்கு கீரனூர், தெற்கு கீரனூர், சாலைக்கிராமம், சூராணம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.