கருகி வரும் சூரியகாந்தி செடிகள்


கருகி வரும் சூரியகாந்தி செடிகள்
x

மழை இல்லாததாலும், கடும் பனிப்பொழிவினாலும் சூரியகாந்தி செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

மழை இல்லாததாலும், கடும் பனிப்பொழிவினாலும் சூரியகாந்தி செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

சூரியகாந்தி பூக்கள்

வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த செவல்பட்டி, எட்டக்காபட்டி, மடத்துப்பட்டி, தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளத்திற்கு அடுத்த படியாக மானாவாரி பயிரான சூரியகாந்தி அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக போதிய மழை இல்லாததாலும், வழக்கத்திற்கு மாறான கடும் குளிரினாலும் சூரியகாந்தி பூக்கள் விளைச்சல் இல்லாமல் வாடி வருகின்றனர். அறுவடைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் பூக்கள் வாடி வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

வளர்ச்சி பாதிப்பு

இதுகுறித்து கங்கரசெவல் விவசாயி பரந்தாமன் கூறியதாவது:-

மானாவாரி பயிரான சூரியகாந்தி சென்ற ஆண்டு விளைச்சல் அமோகமாக இருந்தது. இந்த ஆண்டும் ஆரம்பத்தில் விளைச்சல் நன்கு இருந்தது. ஆனால் அவ்வப்போது சாரல் மழைதான் பெய்தது. மழை பெய்ததால் விளைச்சல் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து இருந்த நேரத்தில் டிசம்பர், ஜனவரி, 2 மாதமும் சிறிதளவு கூட மழை பெய்யவில்லை. ஆனால் அதற்கு மாறாக வழக்கத்தை விட கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சூரியகாந்தி செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

நிவாரணத்தொகை

வளர்ச்சி பாதித்ததால் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. மேலும் தற்போது ஒரு குவிண்டாலுக்கு ரூ. 6 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டது. அறுவடைக்கு பின்னர் குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரமாக உயர்ந்தால் விவசாயிகள் லாபம் பெற வாய்ப்புள்ளது. அவ்வாறு விலை ஏற்றம் இல்லையென்றால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பாதிக்கப்பட்ட பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் பார்வையிட்டு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story