புவனகிரி அருகே கொட்டகை எரிந்து சேதம்; 10 மாடுகள் செத்தன
புவனகிரி அருகே கொட்டகை எரிந்து சேதமானதால் 10 மாடுகள் செத்தன.
புவனகிரி,
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு.உடையூர் கிராமத்தை சேர்நதவர் ஜெயகோபால். இவர் சொந்தமாக 10 பாசுமாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜெயகோபால், தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் மாடுகளை அடைத்து வைத்திருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் மாட்டு கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்தது. மேலும் இந்த தீ பரவி அருகில் வைத்திருந்த வைக்கோல் கட்டுகளுக்கும் பரவியதால் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுபற்றி அறிந்த ஜெயகோபால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். அப்போது கொட்டகை சரிந்து மாடுகளின் மீது விழுந்தது.
போலீசார் விசாரணை
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இருப்பினும் கொட்டகை மற்றும் வைக்கோல் கட்டுகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் இடுபாடுகள் மற்றும் தீயில் கருகி 10 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன. இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மமான முறையில் கொட்டகை தீப்பிடித்து 10 மாடுகள் செத்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
எம்.எல்.ஏ. ஆறுதல்
இந்த சம்பவம் பற்றி அறிந்த கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். மேலும் ஜெயகோபாலின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அவர், கடலூர் மாவட்ட கலெக்டரிடம் கூறி நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். அப்போது புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர், நல்லூர் ஒன்றிய செயலாளர் முத்து, மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் லெனின், மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.