பஸ்களின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம்


பஸ்களின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம்
x
திருப்பூர்


பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொங்கல் பயணம்

இளங்கன்று பயமறியாது என்பது போல இளம் வயதில் சாகசங்கள் செய்யத் துடிப்பது ஆபத்தில் முடியக் கூடும். அந்தவகையில் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கல் பயணம் மேற்கொள்வதால் விபத்துக்களை சந்திக்கும் நிலை உருவாகலாம். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்காக நகரப் பகுதிக்கு வருகின்றனர்.மேலும் வேலைக்கு செல்பவர்களும் அதிக எண்ணிக்கையில் நகரத்துக்கு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுப் போக்குவரத்தான பஸ் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ்சுக்குள் நிற்கக் கூட இடம் கிடைக்காத நிலையில் படிக்கட்டு வரையிலும் ஆண்களும், பெண்களும் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கண்காணிப்பு

குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளி, கல்லூரிகளுக்கோ, வேலைக்கோ சென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஒரே பஸ்ஸில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஏறுகின்றனர். அதிலும் பல இளைஞர்கள் சாகசப் பயணம் செய்வது போல படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்கின்றனர். இதில் ஒரு சிலர் படிக்கட்டில் கால் ஊன்றாமல் ஜன்னல் கம்பிகளில் தொங்கிய படி செல்கின்றனர். மேலும் சில வேளைகளில் அதிக சத்தத்துடன் பாடிய படியும், கூச்சலிட்டபடியும் பயணம் செய்கின்றனர். இதனால் பயணிகள் அச்சமடையும் நிலை உள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயணம் செய்வதால் பஸ் ஒருபுறம் சாய்ந்த படி செல்கிறது. இதனால் அருகில் செல்லும் வாகன ஓட்டிகள் எப்போது விபத்து நடக்குமோ என்ற அச்சத்துடன் பயணம் செய்கின்றனர். எனவே விபத்துக்களைத் தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயணம் செய்யும் காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதையும் தாண்டி படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் போலீசார் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். படிக்கட்டில் பயணம் நொடிப்பொழுதில் மரணம் என்ற வாசகத்தின் வீரியத்தை மாணவர்கள் உணர வேண்டும். விபத்து ஏற்பட்டு உயிரிழப்போ, உடல் உறுப்புகள் சேதமோ ஏற்படும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்துக்கு இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் பஸ் ஓட்டுநர், நடத்துனரும் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே ஆபத்தான பயணம் மேற்கொள்வதை இளை ஞர்கள், மாணவர்கள் தவிர்க்க வேண்டும்என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.


Next Story