கல்கூடப்பட்டியில் அரசு பஸ் கண்ணாடி திடீரென உடைந்தது
பாலக்கோடு:
பாலக்கோட்டில் இருந்து மேல்சீங்காடு கிராமத்துக்கு நேற்று மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கல்கூடப்பட்டி முனியப்பன் கோவில் பகுதியில் சென்றபோது, அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது. இதனால் பஸ் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. அதில் பயணம் செய்த மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இதுகுறித்து பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் இளங்கோவனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் பணிமனையில் இருந்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, அதில் பொதுமக்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும், இதனால் அவை அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.