ராமநத்தம் அருகே பஸ்-கார் மோதல்; மூதாட்டி பலி
ராமநத்தம் அருகே பஸ் கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.
ராமநத்தம்,
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள பட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராமர் (வயது 35), விவசாயி. இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பட்டாக்குறிச்சியில் இருந்து ஆவட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஆவட்டி கூட்டுரோட்டில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற, அரசு விரைவு பஸ் ஒன்று, ராமர் ஓட்டிசென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மேலும் மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடி, தடுப்பு சுவரை தாண்டி எதிரே தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது மோதியது.
மூதாட்டி பலி
இதில் காரில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மேலபுதுக்குடியை சேர்ந்த சாமிதுரை (75), இவருடைய மனைவி ஜெயலட்சுமி (65), கார் டிரைவர் சாமுவேல் மகன் ராஜேஷ் (31) மற்றும் ராமர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். சாமிதுரை உள்பட 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்த புகாாின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.