மினி வேன் மீது பஸ் மோதல்; டிரைவர் படுகாயம்
செந்துறை அருகே மினி வேன் மீது தனியார் பஸ் மோதியது. இதில் மினி வேன் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக செந்துறைக்கு நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை பழனியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஓட்டினார். மேலும் பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர்.
செந்துறை அருகே மணக்காட்டூர் மேற்குப்பட்டி பகுதியில் வந்தபோது, பஸ்சின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ், எதிரே பால் ஏற்றி வந்த வேன் மீது மோதியது. பின்னர் அருகில் இருந்த மரத்தில் மோதி பஸ் நின்றது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் ரஞ்சித்குமார் படுகாயம் அடைந்தார். மினி வேனின் முன்பகுதி சேதமடைந்தது. பஸ்சில் வந்த பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் காயமின்றி தப்பினர். இதையடுத்து ரஞ்சித்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.