பஸ் வசதி இல்லாததால் பரிதவிக்கும் மாணவர்கள்

அஞ்செட்டியில் பள்ளி நேரத்திற்கு பஸ் இல்லாததால் மாணவ-மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டியில் பள்ளி நேரத்திற்கு பஸ் இல்லாததால் மாணவ-மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.
அரசு பஸ்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் எருமத்தனப்பள்ளி, பாண்டுரங்கன்தொட்டி, மிலிதிக்கல், கரடிக்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். போக்குவரத்துக்காக 39-ம் நம்பர் டவுன் பஸ்சையே நம்பியே உள்ளனர். பள்ளிக்கு வரும்போது காலை நேரத்தில் 9.15 மணிக்கு வர வேண்டிய பஸ் 9.50 மணிக்கு வருகின்றது.
இதேபோல் மாலை 5 மணிக்கு செல்ல வேண்டிய பஸ் 4.30 மணிக்கு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. ஒரு சில நாட்களில் பஸ் முன்னதாகவே வந்து விடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் செய்வது அறியாமல் பரிதவித்து வருகின்றனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெற்றோர் கோரிக்கை
இதேபோன்று பள்ளி நேரத்தில் தாமதமாகவும், மாலை நேரத்தில் விரைவாகவும் பஸ் சென்று விடுவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த அரசு பஸ்சை காலை 9.15 மணி முதல் 9.25 மணிக்குள் அஞ்செட்டி வரவும், மாலை 5 மணிக்கு அஞ்செட்டியில் இருந்து புறப்படவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.