பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; ரேஷன் கடை ஊழியர் பலி
நாகை அருகே தனியார் பாஸ்சுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ரேஷன் கடை ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற பெண்ணும் படுகாயம் அடைந்தார்.
நாகை அருகே தனியார் பாஸ்சுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ரேஷன் கடை ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற பெண்ணும் படுகாயம் அடைந்தார்.
ரேஷன் கடை ஊழியர்
நாகை மாவட்டம் ஆழியூரை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் ரமேஷ் (வயது 29). இவர் வடகரை ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிசெய்து வந்துள்ளார். சிக்கல் கீழவீதியை சேர்ந்த தினகரன் என்பவரது மகள் பிரபாவதி (20). இவர்கள் 2 பேரும் நேற்று நாகையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
பாப்பாக்கோவில் அருகே சென்றபோது எதிரே திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை நோக்கி வந்த தனியார் பஸ், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரமேஷ் இடது கால் துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த பிரபாவதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.