காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பஸ் போக்குவரத்து தொடக்கம் கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பஸ் போக்குவரத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார். கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று அவர் கூறினார்.
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பஸ் போக்குவரத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார். கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று அவர் கூறினார்.
போக்குவரத்து தொடக்கம்
வேலூர் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிகாரணமாக மூடப்பட்டது. பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து மினி லாரி, கார், பஸ் போக்குவரத்து தொடங்கியது. நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்தது. பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். பழுதடைந்துள்ள சுவர்களை ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து சீரமைப்பார்கள். ஆனால் போக்குவரத்து நிறுத்தப்படாது.
கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை
கனரக, சரக்கு வாகனங்கள் பாலத்தின் மீது செல்ல அனுமதியில்லை. மாற்றுப் பாதையை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணி விரைவில் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. அதில் நமது மாவட்டமும் ஒன்று. கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.