பயணிகளை முகம்சுளிக்க வைக்கும் பஸ் நிலைய கழிப்பறைகள்; சுகாதாரம் பேணி காக்கப்படுமா?
பஸ் நிலையங்களில் பயணிகளை முகம்சுளிக்க வைக்கும் வகையில் பராமரிப்பு இன்றி காணப்படும் கழிப்பறைகளை சுத்தம் செய்து சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுப்புறம் சுகாதாரமாக இருந்தால் மனித வாழ்வு ஆரோக்கியமாக இருக்கும். சுகாதாரம் என்று எடுத்துக்கொண்டால் தன் சுத்தம், தன் வீடு சுத்தம் என்பதோடு நின்று விடுவது இல்லை. வீட்டுக்கு வெளியேயும் பொது இடங்களில் சுகாதாரம் அவசியமானது.
வெளியிடங்கள் என்று எடுத்துக்கொண்டால் மக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் நிலையங்கள் சுகாதாரமாக இருக்க வேண்டியது முக்கியமானது. ஆனால், பஸ் நிலையங்கள் சுகாதாரமாக இருக்கிறதா? என்ற கேள்வியை ஒவ்வொரு நகரிலும் எழுப்பிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. பஸ் நிலையங்களில் இருக்கும் கழிப்பறைகளின் பராமரிப்பு குறைபாடு இந்த கேள்விக்குறியை முன்வைத்து, முகம்சுளிக்க வைக்கிறது.
கட்டண கழிப்பறைகள்
பஸ் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளுக்குள் மூக்கை பொத்தாமல் சென்று விட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசும் அவல நிலை பல இடங்களில் இருக்கிறது. ஈரமும், மண்ணும் படிந்த தரைப்பகுதி, உடைந்த வாளிகள், ஓட்டை விழுந்த கதவுகள், பாசி படர்ந்த அல்லது ஓட்டை விழுந்த தண்ணீர் குழாய்கள் என்று பராமரிப்பு குறைபாடுகளை அதிகம் பார்க்க முடிகிறது.
தொற்றுநோய்கள் பரப்பும் அபாயத்தில் இருக்கும் பஸ் நிலைய கழிப்பறைகளில் கட்டண கொள்ளை என்பது மற்றொரு தொல்லை. பராமரிப்பு இல்லாமல் இலவசமாக தொற்றுநோய் பரப்பும் கழிப்பறைகளை பயன்படுத்த மக்களிடம் ரூ.10 கட்டணமாக வசூலிப்பது என்பது யாராலும் ஜீரணிக்க முடியாதது. தமிழகத்தில் பல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பஸ் நிலையங்களில் இதே நிலைமை தான் உள்ளது.
பராமரிப்பு இல்லை
தேனி மாவட்டமும் அதில் விதிவிலக்கில்லை என்றே சொல்லலாம். மாவட்டத்தின் தலைநகராக திகழும் தேனியில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் என 2 பஸ் நிலையங்கள் உள்ளன. அத்துடன் பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், தேவாரம் ஆகிய இடங்களிலும் பஸ் நிலையங்கள் உள்ளன. இங்கெல்லாம் பயணிகள் பயன்பாட்டுக்காக இலவச மற்றும் கட்டண கழிப்பறைகள் உள்ளன.
தேனி புதிய பஸ் நிலையத்தை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நடைமேடையிலும் தலா 2 கட்டண கழிப்பறைகள் வீதம் மொத்தம் 6 கட்டண கழிப்பறைகளும், 2 இலவச சிறுநீர் கழிப்பறைகளும், ஒரு மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையும் உள்ளது. ஆனால் இந்த கழிப்பறைகள் எதுவும் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை.
மதுபான பாட்டில்கள்
இந்த கழிப்பறைகளில் நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஏலம் ஒப்பந்த விதிகளில் உள்ளது போன்று முறையாக பராமரித்து சுகாதாரமாக வைப்பது இல்லை. இலவச சிறுநீர் கழிப்பறைகள் இருந்தும், அதனை முறையாக பராமரிக்காததால் பயன்படுத்த முடியாத அவலம் உள்ளது. அவை அமைந்துள்ள இடத்துக்கு அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. அதே நேரத்தில் போதை ஆசாமிகள் மது அருந்தும் இடமாகவும் கழிப்பறைகள் திகழ்கின்றன. இதனால், கழிப்பறைக்குள் காலி மதுபான பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. கட்டண கழிப்பறைகளில் அதிக கட்டணம் கேட்பதால், சிலர் ஹெல்மெட் அணிந்த நிலையிலும், முகக்கவசம் அணிந்து கொண்டும் இலவச கழிப்பறைக்குள் செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த இலவச கழிப்பறைகளில் தண்ணீர் குழாய்களும் உடைந்து கிடப்பதால் சுத்தம் செய்ய தண்ணீரும் இல்லை.
பஸ் நிலையங்களில் பராமரிக்கப்படாத கழிப்பறைகள் குறித்து பயணிகள் சிலர் தெரிவித்த கருத்துகளை இங்கே காண்போம்.
கடுமையான துர்நாற்றம்
தேனியை சேர்ந்த முத்துக்குமார் கூறும்போது, "பஸ் பயணங்களின் போது சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக கழிப்பறை பிரச்சினை இருக்கிறது. பஸ் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. தேனி புதிய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறைக்குள் சிறுநீர் கழிக்கச் சென்றால் கூட ரூ.10 கேட்கிறார்கள். ஆனால், கழிப்பறைக்குள் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மதுபான பாட்டில்களும் கிடக்கின்றன. சபரிமலை சீசன் காலங்களில் ஏராளமான பக்தர்கள் தினமும் தேனி பஸ் நிலையம் வந்து செல்வார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் காலில் செருப்பு அணிவதை தவிர்ப்பார்கள். அப்படி இருக்கும் போது, பஸ் நிலையத்துக்குள் சுகாதாரக்கேடால் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. பஸ் நிலையம் போல் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கழிப்பறைகளும் முறையாக பராமரிப்பது இல்லை. பயன்படுத்தும் மக்களும் சரியாக தண்ணீர் ஊற்றிவிட்டு வருவது இல்லை. கழிப்பறை ஏலம் விடும் முறையை கைவிட்டு நகராட்சி நிர்வாகமே பராமரித்து இலவச கழிப்பறைகளாக மாற்ற வேண்டும். சில கழிப்பறைகளை சிலர் கஞ்சா, மதுபானம் விற்பனை செய்யும் இடமாக பயன்படுத்துகின்றனர்" என்றார்.
சுகாதாரக்கேடு
உப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருண்குமார் கூறும்போது, "பஸ் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை அன்றாடம் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு செய்வதாக தெரியவில்லை. ரூ.10 கட்டணம் வசூலிப்பது எல்லாம் அநியாயம். சுகாதாரத்துறை அதிகாரிகள் மாதம் ஒருமுறையாவது பஸ் நிலையத்தில் ஆய்வு செய்ய வேண்டும். தேனி புதிய பஸ் நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. அதன் அருகில் தான் இலவச சிறுநீர் கழிப்பறை உள்ளது. ஆனால் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இலவச கழிப்பறையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சுகாதாரக்கேட்டில் சிக்கி உள்ளது. கட்டண கழிப்பறையில் அரசு நிர்ணயித்த கட்டண விவரத்தை பொதுமக்கள் பார்வையில் படும்படி எழுதி வைக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. முறையாக பராமரிக்க வேண்டும்" என்றார்.
மக்களின் தவறுகள்
தேனியில் பஸ் நிலைய கழிப்பறைகளை ஏலம் எடுத்து நடத்தி வருபவர்களிடம் கேட்டபோது, "கட்டண கழிப்பறையை பராமரிப்பதில் நிறைய செலவுகள் ஆகிறது. நகராட்சிக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவு செய்து ஏலம் எடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ரூ.1,000 செலவு ஆகிறது. கழிப்பறையை பயன்படுத்தும் மக்கள் நிறைய தவறு செய்கிறார்கள். கழிப்பிடத்துக்குள் வந்து மது அருந்துகிறார்கள். மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை கழிப்பிடத்துக்குள் போட்டுச் செல்கின்றனர். அவை அடைப்பு ஏற்படுத்துகிறது. பெண்கள் கழிப்பறைக்குள்ளும் மதுபான பாட்டில்களை அகற்றி இருக்கிறோம். சில பெண்கள் மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் நாப்கின்களை குப்பைத் தொட்டியில் போடாமல் கழிப்பிட கோப்பைக்குள் போட்டு தண்ணீர் ஊற்றிச் செல்கின்றனர். இதனால், அடிக்கடி தண்ணீர் செல்லாமல் அடைப்பு ஏற்படுகிறது. அதை சுத்தம் செய்யும் போது அதுபோன்ற கழிவுகளை அகற்றுகிறோம். தண்ணீர் வசதி இருந்தாலும் மக்கள் அதை முழுமையாக பயன்படுத்துவது இல்லை" என்றனர்.
புகார் செய்தால் நடவடிக்கை
இதுகுறித்து நகராட்சி சுகாதார அதிகாரிகளிடம் கேட்டபோது, "பஸ் நிலையங்களில் இலவச கழிப்பறைகளில் தண்ணீர் குழாய்களை மதுபோதையில் சிலர் உடைத்துச் செல்கின்றனர். கட்டண கழிப்பறைகளை முறையாக பராமரிக்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். திறந்தவெளி கழிப்பிடத்தை தடுக்கவும் விழிப்புணர்வு ஓவியங்கள் பஸ் நிலையத்தில் வரையப்பட்டுள்ளன. கழிப்பறைகளில் ரூ.1, ரூ.2 என்று தான் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. சமீபத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டு ரூ.3 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம். நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
இலவச கழிப்பறைகளை அன்றாடம் சுத்தம் செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. கட்டண கழிப்பறைகளை ஏலம் எடுத்தவர்கள் சுகாதாரமாக பராமரிக்க வேண்டியது அவசியம். அதைத்தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது சுகாதாரத்துறை அதிகாரிகள் கடமை. இலவசமோ, கட்டணமோ தங்கள் வீட்டு கழிப்பறை போல் பொது கழிப்பறைகளையும் பயன்படுத்துவதுடன், சுகாதாரமாக வைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்க வேண்டும்.