கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்கள்


கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்கள்
x

கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்கள்

தஞ்சாவூர்

தஞ்சை மருத்துவகல்லூரி சாலையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் கீற்று கொட்டகையால் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மருத்துவக்கல்லூரி சாலை

தஞ்சையில் உள்ள முக்கிய சாலைகளில் மருத்துவக்கல்லூரி சாலையும் ஒன்று. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளன. தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் நாள்தோறும் கல்வி, மருத்துவம், வர்த்தகம், தனியார் மற்றும் அரசுத்துறை பணிகள் போன்றவற்றிற்காக தஞ்சைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு துறை பணிகளுக்காக நாள்தோறும் பலர் இந்த சாலையின் வழியாக வந்து செல்கின்றனர். இந்த சாலையில் பயணிகளின் வசதிக்காக ஏராளமான பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒருசில பஸ் நிறுத்தங்களில் மட்டுமே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்ப்பல்கலைக்கழகம் பஸ் நிறுத்தம், மற்றும் அதற்கு அடுத்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. அதற்கு பதிலாக தென்னை கீற்றுகளால் கொட்டகை போன்று அமைக்கப்பட்டுள்ளது. அதும், ஏற்கனவே வீசிய காற்றால், பெயர்ந்து கோடைகாலத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் போல் காட்சி அளிக்கிறது.

நிழற்குடை இல்லை

இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பஸ் ஏறுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் ஒரு சில பஸ் நிறுத்தங்களில் மட்டுமே நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற இடங்களில் நிழற்குடை இல்லை. குறிப்பாக தமிழ்ப்பல்கலைக்கழகம் பஸ் நிறுத்தம் மற்றும் அதற்கு அடுத்த பஸ் நிறுத்தத்தில் பஸ் நிறுத்தம் என்று அறிவிப்பு பலகை மட்டுமே உள்ளது. நிழற்குடை இல்லாமல், கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டுள்ளது.

நிழற்குடை இல்லாததால் மழைக்காலங்களில் மழையில் நனைந்து கொண்டும், வெயிலில் நின்று கொண்டும் பஸ் ஏறி பயணித்து வருகிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சையில் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மருத்துவக்கல்லூரி சாலையில் நிழற்குடை இல்லாத இடத்தில் இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம் என்றனர். எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள், கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டுள்ளதை இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடையாக புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story